கர்ப்பப்பை கோளாறு உள்ள பெண்கள் வழிபட வேண்டிய கோயில்!

63

கர்ப்பப்பை கோளாறு உள்ள பெண்கள் வழிபட வேண்டிய கோயில்!

நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டி என்ற ஊரில் உள்ள கோயில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில். இந்தக் கோயிலில் பாலசுப்பிரமணியசுவாமி மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், திருக்கார்த்திகை ஆகிய நாட்கள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

முருகப் பெருமானின் சன்னதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு. இங்குள்ள சுனை நீர் வற்றவே வற்றாதாம். கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதால் இந்த மலை கொங்கண மலை என்று அழைக்கப்பட்டு, தற்போது அலவாய் மலை எனப்படுகிறது.

கார்த்திகை சோம வாரத்தில் வேலவனை வேண்டினால், குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூப்படைவதில் சிக்கல் உள்ள பெண்களும், கர்ப்பப்பை கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களும் இங்குள்ள சுனைநீரை பருகினால் குணமாகும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருநாளன்று முருகப் பெருமான், சூரனை வதம் செய்து ஆட்கொண்டார்.

முருகப் பெருமானின் அருள் பெற்ற சூரபத்மன் தெற்கு திசையில் இருப்பதாக ஐதீகம். அவனுக்கு அருள்பாலிக்கும் விதமாக ஆஞ்சநேயர் இந்த மலையில் தெற்கு பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

ஒரு காலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து வந்த பக்தர் ஒருவர் பழநி முருகப் பெருமானை தரிசிக்க சென்றார். அப்போது பக்தரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான் அலவாய் மலையை குறிப்பிட்டுச் சொல்லி தான் அங்கு எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்கும்படி கூறியதோடு, இந்தப் பணி முடியும் வேளையில் உனக்கு குழந்தை கிடைக்கும் என்று அருளினாராம்.

அதன்படியே இத்தலம் வந்த அந்த பக்தர் கந்தனை தரிசனம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தார். அந்த திருப்பணி முடியும் நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வார்கள்.