கல்வியில் சிறந்து விளங்க சென்று வர வேண்டிய கோயில்!

43

கல்வியில் சிறந்து விளங்க சென்று வர வேண்டிய கோயில்!

தேனி மாவட்டம் வேதபுரி என்ற ஊரில் உள்ள கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில். இந்தக் கோயிலில் பிரஜ்ஞா தெட்சிணாமூர்த்தி மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் 5 கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மற்றும் 11 மணிக்கு காளீஸ்வர் பூஜை, காலை 8 மணிக்கு தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு காலசாந்தி பூஜை,  11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது.

பிற்பகல் 12 மணிக்கு நடை சாற்றப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு காளீஸ்வர பூஜை, 6.30 மணிக்கு மஹா தீபாராதனை, இரவு 7.45 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். இரவு 8 மணிக்கு திருக்காப்பிடுதல் வைபவம் நடைபெறும். இது தவிர வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். மூலவருக்கு 16 வித உபச்சாரங்களுடன் சாயரட்ஷை பூஜை, தொடர்ந்து சகஸ்ர நாம பூஜையும் நடைபெறும்.

மேலும், சிறப்பு அபிஷேக ஆராதனை தீபாராதனையும் இதில் இடம் பெறும். பிரதோஷ நாட்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் நந்திக்கும், சிவனுக்கும் பல்வேறு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் செய்யப்படும். மூலவர் பிரஜ்ஞா தெட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

மகா மண்டபத்தின் நீளம் 108 அடி, அகலம் 54 அடியாக உள்ளது. பக்தர்கள் மண்டபத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சுவாமியை நன்றாக தரிசிக்கும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூலவரையும் விமானத்தையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இறைவனை பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தேனி அருகிலுள்ள வேதபுரியில் தனிக்கோயில் அமைந்துள்ளது.

இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தெட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோயிலில் கால பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதை தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம். கற்பூரம் ஏற்றுவதும் இந்தக் கோயிலில் தடை செய்யப்பட்டுள்ளது.