கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபாடு செய்த சரஸ்வதி அம்மன்

234

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாப புரம் என்ற ஊர் அக்காலத்தில் கேரளாவின் நாஞ்சில் நாடு மற்றும் வேணாடு ஆகிய பகுதியின் தலை நகராக விளங்கியது. அக்காலங்களில் நவராத்திரி விழா பத்ம நாப புரத்தில்தான் 1840 வரை நடத்தப்பட்டது. 1840ல்தான் சுவாதி திருநாள் மகராஜாதான் நவராத்திரி திருவிழாவை திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இப்போதும் பத்மநாபபுரம் கோட்டை மட்டும் கேரளாவைச் சார்ந்ததாகத்தான் உள்ளது. பத்மநாப புரம் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள இராமசாமி கோயிலின் உட்பிரகாத்தை சுற்றி வெளிப் பக்கம் இராமாயணக் காட்சிகள் 145 மரப் பலகைகளில் செதுக்கப் பட்டுள்ளன. இந்தக் கோட்டையின் உள்ளிருக்கும் சரஸ்வதி சிலையைத்தான் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி க்கு முன்னால் பல்லக்கில் வைத்து நடைப் பயணமாக திருவனந்த புரம் கொண்டு சென்று பின் நவராத்திரி முடிந்த உடன் மீண்டும் பத்மநாப புரம் கொண்டு வந்து விடுவார்கள். இந்த வருடமும் நடைப் பயணமாக நேற்று திருவனந்த புரம் கொண்டு சென்று விட்டார்கள். சரஸ்வதி சிலை மட்டுமல்லாமல், முருகர், முன்னுதித்த அம்மன் சிலைகளையும் நவராத்திரியோடு கொண்டு செல்வார்கள். பத்மநாபபுரம் அரண் மனையிலிருந்து கொண்டு செல்லும் சிலையை திருவனந்தபுரத்தில் கோட்டையகம் உள்ளே கொலு வைத்து வணங்குவார்கள். .
அதுபோல் சுசீந்தரம் முன்னுதித்த அம்மன் திருமேனியை திருவனந்தபுரம் செந்திட்டை அம்மன் கோயிலில் கொலு வைப்பார்கள்.
குமாரர் கோவில் மலை மேல் உள்ள முருகனை திருவனந்தபுரம் அரியாலை சிவன் கோயிலில் வைத்து வணங்கி மீண்டும் நவராத்திரி முடிந்த உடன் இங்கு கொண்டு வந்து விடுவார்கள்.
பத்மநாபபுரத்தில் உள்ள சரஸ்வதி சிலை கம்பரால் வணங்கப்பட்ட பஞ்ச லோகச் சிலையாகும்.
கம்பர் மகன் அம்பிகாபதி அரசனின் மகளை விரும்பிய காரணத்தால் அம்பிகாபதியை அரசன் கொன்று விட்டான். அதனால் சோழ நாட்டிலிருந்த கம்பர் அரசனோடு பிணக்கு கொண்டு பாண்டிய நாட்டிற்கு வந்து அங்குதான் சடகோப அந்தாதியைப் பாடினார். பின் சேர நாடு வந்து சரஸ்வதி அந்தாதி யைப் பாடினார்.
சோழ நாட்டில் இருக்கும்போது, தான் வணங்கிய சரஸ்வதி சிலையை சேர நாட்டிற்கு வரும்போது உடன் எடுத்து வந்து பத்மநாபபுரம் அரண்மனையில் நிரந்தரமாக வைத்து விட்டார். அந்த சரஸ்வதி சிலை தான் ஒவ்வொரு வருடமும் திருவனந்தபுரம் செல்கிறது.
கம்பருடைய கடைசி காலத்தில் அவர் காரைக்குடி அருகிலுள்ள நாட்டரசன் கோட்டைக்கு சென்று அங்குதான் இறந்தார்.
கம்பராமாயண ஓலைச்சுவடிகள் அதிகமாக கிடைத்து குமரி மாவட்டத்தில்தான்.
கம்பர் வணங்கிய சரஸ்வதி சிலை உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு நாமும் சென்று அந்த சரஸ்வதி அம்மனையும் இராமாயண காட்சிகள் அமைந்துள்ள மரச் சிற்பங்களையும் கண்டு வழி படுவோம்.
அரண்மனை செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் திறந்திருக்கும்.