கஷ்டம் துன்பம் காரணம் என்ன?

33

கஷ்டம் துன்பம் காரணம் என்ன?

நமக்கு தீராத கஷ்டம் வரும்போதெல்லாம் ஆறுதல் சொல்ல யாருமே இல்லை என்று, நமக்கு நாமே புலம்பிக் கொள்வதே வழக்கமாகி விடுகிறது. கஷ்டத்தை யாரிடமாவது சொல்லும்போது இது கிரக கோளாறு, அல்லது இப்போது உனது ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று சொல்லி குழப்பி விட்டு அதற்குத் தீர்வு சொல்லாமல் மேலும் நம்மை துன்பத்துக்கு ஆளாக்கி விட்டு சென்று விடுவார்கள்.

இவ்வளவு ஏன் துன்பத்துக்கு காரணம் நமது கர்ம வினையாக கூட இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் சரி செய்யத்தான் அம்பாள் துணை நிற்கிறாளே. அவளை சரணைடைந்தால் எல்லாமே மங்கலம் தான்.

மன்னிப்பாள் மகா துர்கை:

எதுவாகத்தான் இருக்கட்டுமே…

தவறு நம்முடையதாக கூட இருக்கட்டும். அனைத்தையும் மன்னிக்கும் அருள் படைத்த அம்பாள் துர்க்கை நமக்கு அன்னை போல இருக்கிறாளே… அவளிடம் தவறுக்கு மனமுருக மன்னிப்பு கேட்டுவிட்டு அவளுக்கான வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்து வேண்டுதலை வைக்கலாம். இதனால் மனம் உருகி குழந்தையை காக்கும் அன்னையாய் காத்திடுவாள். அம்மாளுக்கு உகந்த நேர வழிபாடு இன்னும் கூடுதல் பலனை கொடுக்கும்.

செவ்வாய் ராகு காலம்…

கஷ்டம் என்று வந்துவிட்டாலே செவ்வாய் கிழமை ராகுகாலம் துர்க்கையை வழிபட சிறந்த காலம். தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சக்தி இந்த ராகு கால பூஜைக்கு உண்டு. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் துர்கை அம்மன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு விளக்கின் முன்பாக அமர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் மனதின் ஒரு ஓரத்தில் இந்த கஷ்டத்தை வைத்துவிட்டு பின்வரும் மந்திரத்தை அம்பாள் முகம் பார்த்து ஒருமனதாக சொல்லுங்கள். ஆனால் சூழ்நிலைகளால் கோயிலுக்கு போகமுடியவில்லை என்றால் மனம் தளர வேண்டாம். அம்பாளை நினைத்து வீட்டில் பூஜை செய்யலாம்.

வீட்டு பூஜை அறையில்…

கோயிலுக்கு போக முடியவில்லை என்றால் என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டு பூஜை அறையில் துர்கை அம்மன் படம் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்மன் முன் அமருங்கள். செவ்வாய் கிழமை ராகு காலம் பிற்பகல் 3 மணி முதல் 4:30 மணி வரை. இந்த நேரத்தில் கோயிலானாலும் சரி, வீட்டு பூஜை அறையானாலும் சரி. விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

அம்பாள் முன் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, தீபத்தின் முன் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்….

“ஓம் தும் துர்கையை நமஹ”

என்கிற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மந்திரத்தை சொல்லிவர, அம்பாள் உங்கள் கஷ்டத்தை சூரியனை கண்ட பனி போல மறைய வைப்பாள். உங்கள் கூடவே பக்க பலமாக இருப்பது போல உணர வைப்பாள்.

பூஜையில் விளக்கேற்றி வைத்து மந்திரம் சொன்னால் மட்டும்தானா அம்பாள் துணை இருப்பாள்? இல்லையில்லை…எங்கு எந்த நேரத்தில் நீங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டு தத்தளித்தாலும். இந்த மந்திரத்தை 4 முறை உச்சரியுங்கள்.எங்கிருந்துதான் வந்தது என்று தெரியாமல் இக்கட்டை சமாளிக்கும் தைரியம் தானாக வந்து சேரும்.

சும்மா ஏனோதானோ என்றெல்லாம் மந்திரத்தை சொல்லக் கூடாது… அம்பாளின் அழகிய முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, பாசம் பக்தி பொங்க சொல்லுங்கள். உங்களுக்கு உதவி இல்லை என்று மூடிய கதவெல்லாம் கூட உதவி செய்ய திறக்கும்.

சில பெண்கள் தொட்டதுக்கெல்லாம் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள். எதற்கெடுத்தாலும் அழுவார்கள். இப்படிப்பட்ட பெண்கள் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, வீரசக்தியாக மாறி காண்போரை வியப்பில் ஆழ்த்துவார்கள்.

தந்திரம் செய்யாததை மந்திரம் செய்யும் என்றும் சொல்வது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

“ஓம் தும் துர்கையை நமஹ”