காசிக்கு அடுத்து தனி சன்னதியில் அருள் பாலிக்கும் தட்சிணகாசி கால பைரவர்!

50

காசிக்கு அடுத்து தனி சன்னதியில் அருள் பாலிக்கும் தட்சிணகாசி கால பைரவர்!

தர்மபுரி மாவட்டம் தகடூரை மையமாகக் கொண்டு வாழ்ந்த சிற்றரசர்களில் அதியமான் என்ற மன்னனும் ஒருவர். இவருக்கு, எப்போது எதிரி நாட்டு மன்னர்கள் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருந்தது. காலப்போக்கில் அச்சம் அவருக்கு மன நிம்மதியை கெடுத்தது.

இதையடுத்து, தனக்கு நிம்மதி கிடைக்கவும், பகைவர்களால் ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்வது என்று ராஜகுருவிடம் கேட்டார். அதற்கு, ராஜகுருவோ பகை மன்னர்களிடமிருந்து பாதுகாக்க படை பலத்தையும் மீறிய தெய்வ சக்தி துணையிருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான கால பைரவர் தான் என்றும் கூறினார்.

ராஜகுரு கூறியதைக் கேட்ட அதியமான் மன்னன் சிவன் கோயில்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவரே தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று தெளிவு பெற்றார். இதையடுத்து, கால பைரவருக்கு ஒரு கோயில் கட்டவும் விரும்பினார்.

கால பைரவர் பற்றி அறிந்து கொண்ட மன்னன், தனது அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி வைத்து கால பைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். கால பைரவரின் விக்கிரகம் வருவதற்கு முன்னதாகவே கோயில் கட்டும் திருப்பணிகளையும் தொடங்கினார். கோயில் வேலை முடிக்கவும், கால பைரவர் விக்கிரகம் வந்து சேரவும் சரியாக இருந்தது.

தான் கட்டிய கோயிலில் கால பைரவரை பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் விதானத்தில் நவக்கிரகங்களின் திருவடிகளையும் வடித்தார். நவக்கிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக் கூடாது என்பதற்காகவும் அதியமான் மன்னர் நவக்கிரகங்களை வழிபட்டார்.

தன் நாட்டையும், நாட்டு மக்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்த கால பைரவர் என்பதால், தன திருக்கரத்தில் திரி சூலத்துடன் வாளும் கொண்டு காட்சி தருகிறார். தனது நாட்டை பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவரது கையில் திரி சூலத்துடன் போர் ஆயுதமான வாளும் வைத்துள்ள பைரவரை வணங்கி வருகின்றனர். காசிக்கு அடுத்து தனி சன்னதியில் இருக்கும் கால பைரவர் தட்சிணகாசி கால பைரவர் என்று பிரசித்தி பெற்று திகழ்கிறார்.