காண கண் கோடி வேண்டும் ஆனி திருமஞ்சனம்

59
காண கண் கோடி வேண்டும் – எம்பெருமான் ஆனி திருமஞ்சன அபிஷேகத்தை காண !
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் எடுத்துரைக்கின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் மிகச்சிறப்பானவை மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்கள். அதன்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை 27ம் தேதி தில்லைக்கூத்தனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி முதலான திதிகளிள் நடராஜருக்கு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதாவது மனிதக் கணக்கில், ஒரு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள். தேவர்களின் கணக்கில் ஒருநாளில் ஆறுகாலத்தில் அபிஷேகங்கள் என அவை கணக்கிடப்படுகின்றன.
நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஆடல்வல்லான்.
இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே!
பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்புமிக்கவை.தில்லைக்கு செல்லமுடிந்தவர்கள் பாக்கியவான்கள் .இயலாதவர்கள் அருகில் உள்ள கோயில்களில் ஸ்ரீ நடராஜ பெருமான் அபிஷேகம் கண்டு களித்து வாழ்வில் வளம் பெறலாம்.இப்போதைய சூழலில், ஆனந்தக் கூத்தனை வீட்டிலிருந்தே பிரார்த்திப்போம். உலக நன்மைக்காக, மக்களின நலனுக்காக தில்லைக்கூத்தனை மனதாரப் பிரார்த்திப்போம்.