காதல் ஜோடிகள் வழிபட வேண்டிய காதல் விநாயகர் கோயில்!

141

காதல் ஜோடிகள் வழிபட வேண்டிய காதல் விநாயகர் கோயில்!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் என்ற ஊரில் உள்ள கோயில் தான் பாடலீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் பாடலீஸ்வரர் மூலவராக காட்சி தருகின்றார். உடனுறை பெரியநாயகி அம்மன் காட்சி தருகிறாள். பொதுவாக விநாயகர் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய ஆயுதங்கள் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், இந்த பாடலீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் காதல் விநாயகராக காட்சி தருகிறார். அதாவது, பூவை மட்டும் கையில் ஏந்தி காட்சி தருகிறார்.

ஒரு முறை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் பகடை (சொக்கட்டான்) ஆட்டம் ஆடினர். இதில், பல முறை சிவபெருமானே தோல்வியடைந்தார். தான் வெற்றி பெற்ற கர்வத்தில் திகழ்ந்த பார்வதி தேவியார், சிவபெருமானின் திருக்கண்களை தனது திருக்கரங்களால் மூடினார். இதனால், உலகம் யாவும் இருளில் மூழ்கியது.

இதனால், அதிர்ச்சியடைந்த பார்வதி தேவி தனது தவறுக்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கோரினார். எனினும், செய்த தவறுக்கு பார்வதி தேவியை பூலோகம் சென்று, அங்குள்ள சிவன் கோயில்களில் வழிபடும்படியும் கூறினார். மேலும், அப்படி ஒவ்வொரு கோயிலாக வழிபடும் போது எந்த கோயிலில் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.

அதுபோல் இறைவியும் பல சிவ தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இந்த ஊருக்கு வந்தார். அப்போது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி உருவமில்லாமல் இறைவனை வணங்கி அவரை திருமணம் செய்து கொண்டார். பாதிரி மரங்கள் அடர்ந்த இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் என்றழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மூலவர் பாடலீஸ்வரர் என்றும், அம்பாள் பெரியநாயகி அம்மன் என்றும் பெயர் பெற்றனர். சிவபெருமான், பார்வதி தேவியை காண வரும் போது, ஆயிரம் சந்திர கலைகள் சூடி பிரகாசமாக வந்தார். அந்த அழகில் மயங்கிய பார்வதி தேவி, சிவபெருமானை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

இதனால், இந்த பாடலீஸ்வரர் கோயிலில் பள்ளியறை பூஜையின் போது அம்பாளே, அங்கு எழுந்தருளினாள். ஆனால், மற்ற கோயில்களில் பள்ளியறையில் சிவன் தான் எழுந்தருள்வார்.

விநாயகரின் மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துக்கள் காணப்படும். அம்பிகை இறைவனை வணங்கிய போது விநாயகர் உதவி செய்த திருக்கோலம் இது. ஆதலால், அவர் கன்னி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். காதலிப்பவர்களின் பொதுவான சின்ன என்னவோ ரோஜா பூ தான். ரோஜா பூ கொடுத்து தான் ஒவ்வொரு காதலர்களும் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள்.

தனது அன்னை பார்வதி தேவிக்கு கிடைத்தது போன்று அழகிய காதல் கணவன் பக்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று காதல் விநாயகர் நினைக்கிறார். ஆதலால், இவரை அதிகளவில் கன்னிப் பெண்கள் வழிபடுகின்றனர். அதனால், தான் என்னவோ கன்னி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். காதலிக்கும் பெண்கள், இந்த கன்னி விநாயகரை வழிபட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டிக் கொள்ளலாம்.