கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட என்ன பலன் கிடைக்கும்?

143

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட என்ன பலன் கிடைக்கும்?

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் இந்த விழாவானது கோகுலாஷ்டமி என்றும் குறிக்கப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும், லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். சிசுபாலனையும், கம்சனையும், நரகாசூரனையும் வதம் செய்தவற்காக எடுத்த அவதாரம். ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 (இன்று) மற்றும் 19 ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் ராச லீலா மற்றும் தகி அண்டி என்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருஷ்ணரின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம் பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுகளை நடிப்பது ஆகும். தகி அண்டி என்பது உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள வெண்ணைத் தாழியை சிறுவர்கள் நாற்கூம்பு பிரமீடு வடிவில் அமைத்து அதன் மேல் ஏறி அதனை உடைப்பது ஆகும்.

தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர் என்பதால், இவரை கண்ணா, முகுந்தா என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் சொல்லப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்காரம் செய்வது உண்டு. மேலும், வாசலில் தொடங்கி வீட்டு பூஜையறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

திருக்கணித பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 18 ஆம் தேதி (இன்று) வியாழக்கிழமையும், வாக்கியப்பஞ்சாங்கப்படி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் (நாளை) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (19 ஆம் தேதி) அரசு விடுமுறை. கிருஷ்ணர் அவதரித்ததாக சொல்லப்படும் அஷ்டமி திதி நாளை 19 ஆம் தேதி நள்ளிரவு 1.48 மணிக்கு தொடங்கி, மறுநாள் 20 ஆம் தேதி நள்ளிரவு 2.47 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் பூஜை செய்ய காலை 9.15 மணி முதல் 10.15 வரை நல்ல நேரம் ஆகும். கௌரி நல்ல நேரம் நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது. கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் பலரும் இரவில் பூஜை செய்வது வழக்கம். மாலை 05.10 மணி முதல் இரவு 06.10 மணி வரைக்கும் இரவு 08.10 மணி முதல் 09.10 மணி வரைக்கும் பூஜை செய்ய நல்ல நேரமாகும்.

கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்தல் வேண்டும். பூஜையறையில் கிருஷ்ணரின் கால் தடங்களை குழந்தையின் காலடி வைத்து கண்ணனை வீட்டிற்கு அழைக்க வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் கூடுதல் சிறப்பு.

பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட வேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற வேண்டும்.

இந்த நாளில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. அரசியல் ஞானம் உண்டாகும், பகைமை ஒழியும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், கடன் தீரும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.