குடும்பத்தில் அமைதி நிலவ வழிபட வேண்டிய கோயில்!

35

குடும்பத்தில் அமைதி நிலவ வழிபட வேண்டிய கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் என்ற ஊரில் உள்ள கோயில் அருள்மிகு மதனகோபால சுவாமி கோயில். இந்தக் கோயிலில் மதனகோபால சுவாமி மூலவராக காட்சி தருகிறார். மரகதவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பெருமையை இந்தக் கோயிலானது பெற்றுள்ளது.

ஆலயத்தின் சிறப்பு:

இக்கோயில் 15ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. துவாபர யுகத்தில் வியாகர முனிவருக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாகக் கலியுகத்தில் வியாச முனிவர் புலியாகப் பிறந்துள்ளார்.

அவர் பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமியைத் தரிசனம் செய்து பின்னர் புலி உருவம் நீக்கம் பெற்று சாப விமோசனம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் மகாவிஷ்ணு மதனகோபாலனை தரிசனம் செய்ததாகக் கூறப்படும் நிலையில், கோயிலில் வியாச முனிவர் மற்றும் பஞ்சபாண்டவர்களுக்கென்று தனித்தனி சன்னதி உள்ளது.

தல விருட்சம்:

இத்தலத்தின் தல விருட்சமாக நந்தியாவட்டைச் செடிக் காணப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் இச்செடியை வைத்ததாக வரலாறு கூறுகிறது. ஆலயத்தின் கருவறை சுவர்களைச் சுற்றி திருமாலையாக அமைந்திருக்கும் வண்ணம் இச்செடி அமைந்துள்ளது.

சுவாமியின் சன்னதி:

அருள்மிகு மதனகோபால சுவாமி அன்னை மரகதவல்லி தாயார் தனித்தனி சன்னதியாகக் கிழக்கு நோக்கிக் காணப்படுகின்றனர். கோயில் உட்பிரகாரத்தில் வியாகர பாதர், விஷ்ணு துர்க்கை, ஆழ்வார்கள் சன்னதிகளும் வெளிப்பிரகாரத்தின் வடக்கு பக்கத்தில் ஆண்டாள் சன்னதியும், பஞ்ச பாண்டவர் சன்னதியும், தெற்கு பக்கத்தில் கல்யாண விநாயகர் சன்னதியும், இங்குள்ளது.

ஆலயத்தின் முகப்பில் ஒரே கல்லில் 40 அடி உயர ஆஞ்சநேயர் கம்பம் உள்ளது. மேலும் தன்வந்திரி லட்சுமி நரசிம்மர் சீதாராமன் லட்சுமணர் ஆஞ்சநேயர் உடனும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி உடனும், லட்சுமி ஹயக்ரீவர் சரஸ்வதி ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாள், கருடாழ்வார் ஆகிய அவதாரம் தெய்வங்களுடன் தனித்தனி சன்னதியாக அருள்பாலிக்கும் விதம் அமைக்கப்பட்டுள்ளது.

மகா மண்டபம், தாயார் மண்டபம், ஆண்டாள் மண்டபம், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் என மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்குனி உத்திரப் பெருந்திருவிழா, சித்திரை திருநாள், கோகுலாஷ்டமி உறியடி திருவிழா ஆண்டாளுக்கு திருவாடிப்பூரத் திருவிழா, மார்கழி தரிசனம், வைகுண்ட ஏகாதசி, திருமங்கை வேடவரி விழா போன்றவை நடத்தப்படுகிறது.

மேலும், காரடையான் நோன்பு விழா, நரசிம்மர் ஜெயந்தி விழா, ஆஞ்சநேயர் கம்பத்திற்குத் தினமும் ஒரு கால பூஜையும், அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை அணிவித்துச் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகிறது. ஆடி 18 அன்று காவிரி தீர்த்த திருமஞ்சன விழா, ராம நவமி விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கோயிலில் வழிபாடு செய்ய குடும்பத்தில் அமைதி நிலவும், உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில் இனிமை நிறையும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் துளசி மாலை சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சுவாமிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவள்ளி தாயாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.