குடும்பத்தில் யாரேனும் இறந்தால் கோயிலுக்கு போகலாமா?

153

குடும்பத்தில் யாரேனும் இறந்தால் கோயிலுக்கு போகலாமா?

ஒருவரது குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது வீட்டில் கோலம் போடக் கூடாது, கோயிலுக்கு செல்லக் கூடாது, தீபம் ஏற்றக் கூடாது, சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தவறான பழக்கம் இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்றும் இல்லை. இவ்வளவு ஏன், இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அந்தக் குடும்பத்தில் கோயிலுக்கு சென்று வழிபடலாம், வீட்டில் கோலம் போடலாம். இதனால் எந்த தவறும் இல்லை, சாஸ்திர சம்பிரதாயமும் இல்லை.

இடைப்பட்ட காலத்தில் தான் இது போன்ற ஒரு தவறான பழக்கம் வந்துள்ளது. இது போன்ற தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை ஒரு வருடத்திற்கு கோயிலுக்கு செல்ல விடாமல் தடுப்பதோடு, அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித ஆலய வழிபாட்டு பலன்களையும் கொடுக்கவிடாமல் ஓராண்டு காலத்திற்கு தடுப்பதால், அந்தக் குடும்பத்தினர் பல துன்பங்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்த ஒரு வருட காலத்திற்கு அவர்கள் கோயிலுக்கு செல்வதோடு, பண்டிகை காலங்களையும் கொண்டாடலாம். அப்படி கொண்டாடுவதினால் புண்ய சக்தி நமக்கு கிடைக்கும். ஒரு வருடத்திற்கு எந்த கோயிலுக்கும் போக கூடாது, சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்கள் அல்லவா? டிவி பார்ப்பதையும், சினிமா பார்ப்பதையும், செய்தித்தாள் படிப்பதையும், டீ, காபி, சாப்பாடு, ருசிகர உணவுகள் என்று எதையாவது ஒத்தி வைக்கிறார்களா? இல்லையே!

அப்படியிருக்கும் போது இறைவன் மட்டும் ஏன் ஓராண்டு காலத்திற்கு என்னை பார்க்க வரக்கூடாது என்று விதிப்பாரா? அதுவும் இல்லையே! எவர் ஒருவர் இறை நம்பிக்கையுடன் இருக்கிறாரோ அவருக்கே இறைவனின் முழு ஆற்றலும், சக்தியும் கிடைக்கும். இது போன்ற துக்க நேரத்திலும் இறைவனை வழிபட்டால் கூட இறைவன் ஒன்றும் சொல்வதில்லை. ஆதலால், இனிமேலாவது துக்க வீட்டில் உள்ளவர்கள் இறைவனை தரிசிக்க மறந்துவிடாதீர்கள்.