குழந்தைகளை பாதுகாக்கும் பைரவர் வழிபாடு!

95

குழந்தைகளை பாதுகாக்கும் பைரவர் வழிபாடு!

திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் என்ற ஊரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில். ஒருமுறை செல்பவருக்கு கூட அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று விதி இருக்க வேண்டும். அதாவது விதி இருந்தால் மட்டும் தான் அந்த கோயிலுக்கு செல்ல முடியும். அப்படி ஒரு முறை அந்த கோயிலுக்கு சென்றுவிட்டால் அதன் பிறகு மீண்டும் மீண்டும் அந்த கோயிலுக்கு செல்லும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்பட்டூர் வரலாறு:

படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மனின் 5ஆவது தலையை சிவபெருமான் கொய்து விட்டார். மேலும், பிரம்மனின் படைப்புத் தொழிலும் பறிபோனது. அதன் பின், 4 முகங்களான பிரம்மா, தனது ஆணவத்திற்காக வருந்தி இறைவனிடம் சாப விமோசனம் கேட்டார். அதற்கு சிவபெருமானோ, பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற ஊரில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாச லிங்கம்) வணங்கினால் சாப விமோசனம் பெறுவாய் என்று அருள் புரிந்தார். அதோடு, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாக கூறினார்.

சிவன் கூறியதைப் போன்று திருப்பட்டூரில் 12 லிங்க வடிவல் உள்ள சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். மேலும், பிரம்மா உன்னை வழிபடுகிறவர்களின் தீய எண்ணங்களை அழிக்கும் வகையில் தீய தலையெழுத்து மங்களகரமாக மாற்றுவாயாக என்று சிவபெருமான் வரம் அளித்தார். அன்று முதல் தன்னை வழிபட வரும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்து வருகிறார். திருப்பட்டூரில் குடி கொண்டுள்ள சிவபெருமானை, பிரம்ம தேவன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வர்ர் என்று பெயர் பெற்றது. இந்த கோயிலில் உள்ள அம்பாள் பிரம்மநாயகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி என்று அழைக்கப்படுகிறாள்.

பிரார்த்தனை: குரு பரிகார தலம்:

குரு பகவானின் அதிதேவதை பிரம்மா. ஆதலால், குரு தோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம், ஜென்ம நடசத்திர நாட்களில் இவரை வணங்கி வழிபட நன்மை உண்டாகும்.

ஆண்டுதோறும் வரும் குரு பெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார பூஜை நடக்கும். திருமண தடை நீங்க பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர, தொழில், வியாபாரம் சிறக்க இந்த பூஜையில் கலந்து கொண்டு பிரம்ம தேவனை வழிபாடு செய்யலாம். மிக முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் இந்த கோயிலில் வழிபாடு செய்யலாம்.

தல சிறப்பு: வித்தியாசமான அமைப்பு:

குருர் பிரஹ்மா;

குருர் விஷ்ணு;

குருர் தேவோ மகேச்வர;

குரு சாக்‌ஷாத் பர ப்ரஹ்மை

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ;

என்ற குரு மந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம் வரும் போது, சிவன் சன்னதி சுவரில் தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனி சன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து விஷ்ணு, இறுதியாக மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம்.

குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு:

பிறந்த குழந்தைகள் முதல் ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் தூங்காமல் எப்போது பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கும். அப்படி அழும் குழந்தைகள் நிம்மதியாக தூங்குவதற்கு பிரம்மபுரீஸ்வர்ர் கோயிலில் உள்ள கால பைரவரை வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சன்னதியில் அர்த்தஜாமத்தில் சாவியை வைத்து பூஜை செய்யப்படும். அந்த பூஜையின் போது தரப்படும் விபூதியை பெற்று குழந்தைக்கு பூசி வந்தால் பைரவரின் அருள் கிடைக்கும். அதோடு, குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரம்மன் மஞ்சள் பூஜை:

படைக்கும் தொழில் செய்து வரும் பிரம்மா மங்கலம் அருளி வாழ்க்கையை சிறப்பிக்க செய்வதால், பூஜையின் போது மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை என்று மஞ்சள் நிறத்தில் பிரசாதம் கொடுக்கப்படுகிறது.

பிரம்ம தேவன் வழிபட்ட மண்டூகநாதர், அருணாசலேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், கந்தபுரீஸ்வரர், கைலாசநாதர், பழமலைநாதர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் மஞ்சள் நிறத்திலான வஸ்திரமே சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காணப்படுகிறார். குருவின் அதிதேவதை பிரம்மா என்பதால், வியாழன் தோறும் இங்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, அபிஷேகம் செய்யப்படுகிறது.

யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அல்லது விதி இருக்கிறதோ அவர்களே இந்த கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாட்கள் விழா நடக்கும். பிரம்மன் சாப விமோசனம் பெறுவதற்கு சிவபெருமான் அருள் செய்த கோயில். என்னதான் சிவபெருமான் கோயிலாக இருந்தாலும், பிரம்மனுக்கு பிரமாண்டமான சிலை உள்ளது. வாழ்வில் தங்களது தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து பிரம்மனை வழிபட, தலையெழுத்து மாறும் என்பது ஐதீகம்.