குழந்தை பாக்கியம் கிடைக்க எலுமிச்சை சாறு வழிபாடு!
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் என்ற ஊரில் உள்ளது ஏகவுரி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஏகவுரி அம்மன் மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. கோயில் பிரகாரத்தில் வாராஹி அம்மன், பிரத்யங்கிரா தேவி, சுப்பிரமணியர், சாலியங்காத்தான், லாட சன்னாசி, வெள்ளையம்மாள், பொம்மியுடன் மதுரை வீரன், கருப்பசாமி, பட்டவராயர், சிவலிங்கம், சப்தகன்னியர் உள்ளனர்.
பொதுவாக அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சாற்றப்படும் எலுமிச்சை மாலையிலிருந்து எலுமிச்சம் பழத்தைத் தான் பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பார்கள். ஆனால், இந்த ஏகவுரி அம்மன் கோயிலில் எலுமிச்சை சாற்றை பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதுவும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டும் தான் இந்த எலுமிச்சை சாறு பிரசாதம் கொடுக்கப்படுகிறது.
அக்னி கிரீடம் அணிந்து 2 தலைகளுடன் பத்ம பீட த்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப்பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இந்த வடிவத்தில் தான் அசுரனை அழித்துள்ளார். இந்த உக்கிரமான முகமானது பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும். இதற்கு மேலே உள்ள மற்றொரு தலை அமைதியின் வடிவமாக உள்ளது. மேலும், பக்தர்களுக்கு நல்லதை மட்டும் அருளும் அமைதி வடிவமாக உள்ளது. அம்பிகையின் 8 கைகளில் சூலாயுதம், உடுக்கை, மணி, கேடயம், கத்தி, நாகம், கபாலம் மற்றும் கிளி ஆகியவை உள்ளது. அம்மனின் பாதத்திற்கு கீழே ஸ்ரீ சக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியம் கிடைக்கவும், களத்திர தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் நீங்கவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டு எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சாற்றப்படும் எலுமிச்சை மாலையிலிருந்து எலுமிச்சம் பழத்தைத் தான் பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பார்கள். ஆனால், இந்த ஏகவுரி அம்மன் கோயிலில் எலுமிச்சை சாற்றை பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதுவும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டும் தான் இந்த எலுமிச்சை சாறு பிரசாதம் கொடுக்கப்படுகிறது. இந்த எலுமிச்சை சாறை குடிக்கும் பெண்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அம்பிகைக்கு வலது மற்றும் இடது புறம் ராகு மற்றும் கேது நாக வடிவங்கள் உள்ளன. ராகு மற்றும் கேது ஆகிய இரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக ஐதீகம். களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷத்தில் திருமணத் தடை உள்ளவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். அம்மனுக்கு குளியலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை படைத்து பெண்கள் வழிபடுகின்றனர். அதையே பெண்களுக்கு பிரசாதமாகவும் கொடுக்கின்றனர். தினந்தோறும் அந்த மஞ்சளை தேய்த்து குளித்து வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.
மேலும், இந்த மஞ்சளின் வடிவிலேயே பக்தர்களின் வீட்டிற்கு அம்பிகை எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதால், நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டு எருமைக் கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தஞ்சாவூரை மையமாக வைத்து ஆட்சி செய்த சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வல்லம் ஏகவுரி அம்மன் வழிபடப்பட்டவள். எப்போதும் போருக்கு செல்வதற்கு முன்னதாக சோழ மன்னர்கள் ஏகவுரி அம்மனை வழிபட்டு அவளது உத்தரவு பெற்றுவிட்டு அதன் பிறகே போருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த வல்லம் ஏகவுரி அம்மனுக்கு, கைத்தலப்பூசல் நங்கை, கரிகாற்சோழ மாகாளி, காளாப்பிடாரி, ஏகவீரி, வல்லத்துப்பட்டாரிகை ஆகிய பெயர்கள் உண்டு.
ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும், சித்ரா பௌர்ணமி நாளில் அம்பிகைக்கு சண்டி ஹோமம் செய்யப்படுகிறது. ஆடி கடைசி வெள்ளி அன்று நடக்கும் விழாவின் போது பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பால் குடம் எடுத்தும், அழகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு வரக்கூடிய வரம் பெற்ற மகிஷாசூரன் தொடர்ந்து தேவர்களை துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் அவனது துன்புறுத்தல்களை தாங்கிக் கொள்ள முடியாத தேவர்கள் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அம்பிகையை அனுப்பி வைத்தார். அம்பிகை அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் போரிட்டான். ஒரு கட்ட த்தில் எருமை வடிவம் எடுத்த அசுரனை, அம்பிகை தனது சூலாயுதத்தால் வதம் செய்தாள். இதையடுத்து, அம்பிகையின் உக்கிரம் அதிகமானது.
அசுரனால், துன்பங்களை அனுபவித்து வந்த தேவர்கள், அம்பிகையை கண்டு அச்சம் கொண்டனர். மேலும், அவர்கள் சிவனை நாடினர். அப்போது, சிவபெருமான், அம்பிகையை பார்த்து ஏ கவுரி (அம்பிகையின் ஒரு பெயரை குறிப்பது தான் இந்த கவுரி (கௌரி)) சாந்தம் கொள் என்றார். கணவனின் சொல் பேச்சு கேட்ட அம்பிகை சாந்தமடைந்தாள்.
கரிகாலற்சோழ மன்னன் அம்பிகைக்கு கோயில் கட்டினான். சிவபெருமான் அழைத்ததன் காரணமாக அம்பிகை ஏகவுரி (ஏகௌரி) அம்மன் என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்தப் பகுதியை வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்தமையால் இந்த கோயிலுக்கு வல்லம் என்றும் அம்பிகைக்கு வல்லத்துக்காளி என்றும் பெயர் வந்தது.