குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

58

குற்றம் பொறுத்த நாதர் கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள கோயில் குற்றம் பொறுத்த நாதர் கோயில். இந்தக் கோயிலில் குற்றம் பொறுத்த நாதர் மூலவராக காட்சி தருகிறார். கோல்வளை நாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இங்குள்ள கோயில் கொகுடிக்கோயில் என்று பெயர் பெறும்.

கொகுடி என்பது ஒருவகை முல்லை. இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. சீர்காழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோயில் அமைந்துள்ளது. உள்மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது.

பிரகாரத்தில் சீர்காழியிலிருப்பது போன்று உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சன்னதி உள்ளது. மேலே சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கு மேல் சென்று சட்டை நாதரை தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏற வேண்டும். இதனாலேயே இத்தலம் மேலைக்காழி என்று அழைக்கப்படுகிறது.

தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது. ஒருமுறை இந்திரன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான்.

அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது. மேலும் இத்தல இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர்.

தான் லிங்கத்தை கொண்டு வருவதற்குள் சீதை மணலால் லிங்கம் செய்து இராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவ அபராதம் ஏற்பட்டது.

இந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள சிவனைக் குறித்து தவம் செய்யும்படி இராமர் அனுமனுக்கு ஆலோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி அனுமனிடம் “தலைஞாயிறு எனப்படும் இத்தலம் சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்” என்று அருள்பாலித்தார்.

அனுமனும் அதன் படி தலைஞாயிறு தலம் வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது “திருக்குரக்கா”‘ என வழங்கப்படுகிறது.

சித்திராங்கதன் எனும் மன்னன் தனது மனைவி சுசீலை உடன் இத்தலத்திற்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டி வழிபட்டான். அதன்படியே அவனுக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. இத்தலத்தில் செய்யப்படும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என பிரம்மதேவன் வசிஷ்டருக்கு கூறினார்.

இதனால் வசிஷ்டர் இங்கே சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு மெய்ஞ்ஞானம் பெற்றார். 72 ரிஷிகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றது. இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது அவர்கள் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்றும், மீண்டும் பிறவாமை பேறு கிடைத்து விடுவதாக ஐதீகம் அதனால் தான் இத்தலம் கருப்பறியலூர் என அழைக்கப்படுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.