குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

39

குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் பால ஆஞ்சநேயர் கோயில். இந்தக் கோயிலில் பால ஆஞ்சநேயர் மூலவராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, ராமநவமி, அமாவாசை, சனி மற்றும் புதன் கிழமைகளில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

பால ஆஞ்சநேயர் சன்னதிக்கு மேல் விமானத்திற்கு பதில் ஆஞ்சநேயர் வால் சுருட்டி அதன் மேல் அமர்ந்திருப்பது போன்று சுதை வடிவில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்தக் கோயிலில் ஆஞ்சநேயர் தான் பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் இல்லை.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், மனக்குழப்பம் நீங்கவும், பயம் நீங்கவும் ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுதல், வெற்றிலை மாலை சாற்றுதல், பழ அலங்காரம் செய்தல், வெண்ணெய் காப்பு சாற்றுதல் என்று வேண்டிக் கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட தோஷ பாதிப்பு குறையும் என்பது ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

வாயு பகவானுக்கும், அஞ்சனா தேவிக்கும் மகனாய் தோன்றிய அனுமனின் பெருமை சொல்லிலும், ஏட்டிலும் அடங்காது. ராமனுக்கு தன்னைத்தானே அர்ப்பணித்து வாழும் ஆற்றல் பெற்றவர் ஆஞ்சநேயர். இத்தகைய ஆஞ்சநேயர் இங்கு சிறுவன் வடிவில் பால ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஆஞ்சநேயருக்கு அவரது வாலில் சக்தி அதிகம். இங்கு ராஜகோபுரமானது வால்கோட்டையாக அமைக்கப்பட்டுள்ளது. வால்கோட்டை கோபுரத்தினுள் ராமர் லட்சுமணர் சீதையுடனும் அவரை வணங்கும் வடிவில் பால ஆஞ்சநேயர் சிற்பங்கள் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பயம் மற்றும் நோய் நீங்க இங்குள்ள பால ஆஞ்சநேயரை வணங்கி கையில் கயிறு கட்டி வேண்டிச் செல்கின்றனர். அப்படி செய்வதன் மூலம் பயம் மற்றும் நோய் நீங்கி குணமடைவதாக சொல்லப்படுகிறது.

பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு மரத்தடியில் வைத்து பல ஆஞ்சநேயரை வழிபட்டு வந்துள்ளனர். அப்போது கிபி 1964 ஆம் ஆண்டு மிகப்பெரிய புயல் பாதிப்பு ஏற்பட்டது. அப்புயலில் அந்த பகுதி முழுவதுமே அழிந்துவிட்டது. இந்தப் புயலில் தான் தனுஷ்கோடி என்ற நகரமே அழிந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த புயலில் பால ஆஞ்சநேயர் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே நின்றார். இந்த ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்ட ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி மன்னர் பால ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து வழிபட்டார்.