குழந்தை பாக்கியம் கிடைக்க சந்தான கோபாலர் வழிபாடு!

114

குழந்தை பாக்கியம் கிடைக்க சந்தான கோபாலர் வழிபாடு!

சென்னை மாவட்டம் கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றம் என்ற பகுதியில் உள்ள கோயில் கரி வரதராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் கரி வரதராஜப் பெருமாள் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடக்கிறது.

மூலவர் கரி வரதர் சுமார் 5 அடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீ தேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு. இங்கு சந்தான கோபாலன், விநாயகர், வரத ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, விஷ்வக்சேனர், சனி பகவான் முதலான தெய்வங்கள் உள்ளன.

குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள சந்தான கோபாலரை வேண்டிச் செல்கின்றனர். இங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கரி வரதர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப் பெற்றவர். காஞ்சி வரதரை ஒத்தவர்.

மூலவர் கரி வரதர் சுமார் 5 அடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீ தேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு. இவருக்கு விஷேசமான தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனமும் உண்டு. வைகானஸ் முறைப்படி மற்ற விசேஷங்களும் உண்டு.

இந்தக் கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உற்சவர் தனது கையில் கதை வைத்திருக்கிறார். இவர், சத்யநாராயணின் அம்சம். அதனால், பௌர்ணமி நாட்களில் கரி வரதராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜை உண்டு. தாயாருக்கு தனியாக சன்னதி கிடையாது. வரத ஆஞ்சநேயர் என்ற அனுமன் சன்னதியும் உண்டு.

இவரும் மகா வரப்பிரசாதி. சனிபகவானின் பார்வை பக்தர்கள் மேல் நேரடியாக படக்கூடாது என்பதற்காக ஒரு கால் ஒன்று ஊனமானதாகவும், அதனால், சற்று தலை சாய்த்து சனி பகவான் இருப்பதாகவும் இந்த தத்துவத்தை உணர்ந்த அனுமனும் சற்றே தலை சாய்த்து முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். உற்சவருடன் சந்தான கோபாலனும் உள்ளார். பிள்ளைவரம் வேண்டுவோர் இவரை பிரார்த்தனை செய்தால் அவர்கள் வீட்டில் குழந்தைச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.

கரி என்றால் யானை என்று பொருள். ஏன் இந்தப் பெருமாள் தனது பெயருடன் ஆனைமுகத்தான் பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார்? கஜேந்திர மோட்சக் கதை நினைவுள்ளதா?

கடிகொள் பூம்பொழிலாய் காமமுறு பொய்கையாய் தாமரை மலர்களுடன் அந்த தடாகம் விளங்க அதை வேழம் யானை பார்த்து நித்யம் ஒரு மலரை பக்தியுடன் மாலோனுக்குக் சமர்ப்பிக்க அந்தக் கரியின் விதிப்படி ஒரு நாள் முதலை ஒன்று காலை பிடிக்க நெடிய போராட்டத்துக்குப் பின் தோல்வியடைந்த யானை ஆதிமூலமே என அழைக்க சரணாகதி என்று வந்த முந்தைய பக்தர்கள் பிரகலாதன் மற்றும் பாஞ்சாலியை விரைந்து வந்து காத்ததைப் போல, இந்தக் கரியையும் காப்பாற்றி முதலை முகத்தில் கரி பூசி, இருவருக்குமே பரந்தாமன் மோட்சம் தருகிறார்.

இந்த நிகழ்வு மதுரவாயிலில் நடந்ததாகவும், நெற்குன்றத்தில் நிகழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதமோ, பாற்கடலின் உள்ளே திரிகூட பர்வதம் என்ற மலையின் அடிவாரத்திலிருந்த ஒரு தடாகத்தில் இந்த கஜேந்திர மோட்சம் நடந்ததாக விவரிக்கின்றது. கபிஸ்தலம் போன்ற தலங்களும் உதாரணமாக சொல்லப்படுகின்றன.

கரி மோட்சம் எங்குதான் நடந்தது? ஒரு காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பாரத நாடு, இன்று சுருங்கி சிறிய தீபகற்பம் போல் இருப்பதும் அறுபதுகளில் நாம் கண்ட தனுஷ்கோடி பிறகு காணாமல் போனதும் உண்மைதானே. எனவே இந்த ஆராய்ச்சியை தவிர்த்துவிடுவோம். கண் இமைகள் மூடிய நிலையில் பக்தர்தம் பரிபாலனத்துக்காக எப்போதும் யோசனையில் இருப்பதுபோல் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் காட்சி தருகிறார்.