கூந்தல் பின்னுதலில் உள்ள ரகசியம் என்ன?

74

கூந்தல் பின்னுதலில் உள்ள ரகசியம் என்ன?

பொதுவாகவே வீடுகளில் முன்னோர்களோ பெரியோர்களோ எப்போதும் பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். காலை மற்றும் மாலை என்று இரு நேரங்களிலும் பெண்கள் தலை சீவி பொட்டு வைத்துக் கொள்வார்கள். இதனை காலங்காலமாக பெண்கள் செய்து வந்தனர். ஆனால், இன்றைய காலத்தில் தலைவிரித்து ஸ்டைலாக இருப்பதை ஃபேஷன் என்று சொல்லிவருகிறார்.

எதற்காக பெண்கள் தங்களது கூந்தலை பின்னி முடிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்? என்ன காரணம்? என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம். துக்கமான சம்பவம் நடந்தால் பெண்கள் தலைவிரி கோலமாக இருப்பார்கள். இதை வைத்து அந்த வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். கற்புக்கரசியாக விளங்கிய கண்ணகி கூட தன் கணவன் இழந்த பிறகு தான் தலைவிரி கோலத்திற்கு மாறினாள்.

பெண்ணாக பிறந்தவள் அந்த வீட்டில் குலவிளக்கு என்று கூறுவார்கள். அதாவது ஒரு குடும்பத்தின் குலத்தை வாழ வைக்க விரிவுபடுத்த வந்தவள் என்று குறிப்பிடுவார்கள். பிறந்த வீடு, புகுந்த வீடு இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். அதாவது, பெண்கள் கூந்தலை பின்னி தலை சீவும் போது முடியினை 3ஆக பிரித்து, அந்த 3 பிரிவுகளையும் ஒன்றாக பின்னிக் கொள்வார்கள். இந்த 3ல் நடுவில் இருப்பது பெண் என்றும் இடது பக்கம் இருப்பதை பிறந்த வீடு என்றும், வலது பக்கம் இருப்பதை புகுந்த வீடு என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு வீட்டையும் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பெண்கள் கூந்தலை வைத்து நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதோடு, பெண்களின் சக்தியானது முடி மற்றும் கால்களின் வழியாக வெளியேறுவதாக சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்படுகிறது. இதனால், தான் முந்தைய காலங்களில் பெண்கள் தங்களது கூந்தலின் நுனிப்பகுதியை குஞ்சத்தால் கட்டிக் கொண்டனர். ஒரு சில பெண்கள் ரிப்பன் வைத்து கட்டிக் கொண்டார்கள். சமையலறையில் சமைக்கும் போது சாப்பாட்டிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளிலோ முடி உதிர்ந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தவும் கூந்தலை பின்னிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எப்போதும், பெண்கள் தலை சீவும் போது நேர் வகுடு எடுத்து சீவ வேண்டும். அப்படி நமது கூந்தலை இரு பாகங்களாக பிரிக்கும் பட்சத்தில் மூளை சீராக செயல்படும் என்ற அறிவியல் உண்மையும் அதில் சொல்லப்படுகிறது. சாஸ்திரங்களும், முன்னோர்களும் பெண்கள் தலைவிரி கோலத்தோடு இருக்க க் கூடாது என்பதைத் தான் வலியுறுத்துகின்றன.

இவ்வளவு ஏன், கோயில்களில் சிலைகளை வடிவமைக்கும் சிற்பிகள் கூட பெண்கள் தெய்வங்களின் கூந்தல்கள் கூட பின்னியிருப்பது போன்றே சிலைகளை வடிவமைத்திருக்கின்றனர். நிறைய கோயில்களில் கல்தூணில் இருக்கும் காவல் பெண் தெய்வங்களின் கூந்தல் பின்னியிருப்பது இன்றும் நம் கண்ணுக்கு தெரியக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.