கெட்ட நேரம் அழிய காலதேவி கோயில் வழிபாடு!

34

கெட்ட நேரம் அழிய காலதேவி கோயில் வழிபாடு!

நாங்க, போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. பிரச்சனை தீர்ந்தபாடில்லை என்று மனம் வருந்துவோர் எத்தனையோ பேர். அவர்களுக்கு எல்லாம் அருள் புரிவதற்கு காத்திருக்கிறாள் கால தேவி. மதுரை மாவட்டம், எம் சுப்புலாபுரம் சிலார் பட்டியில் காலதேவி கோயில் உள்ளது. இந்த கோயில் இரவில் மட்டுமே திறந்திருக்கும் என்பது சிறப்பு வாய்ந்தது.

தல வரலாறு:

காலதேவி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தந்து கொண்டு இருக்கிறாள். ஆனால், ஒரு ஜாதகத்தில் நல்ல நேரம் இருந்தால் மட்டுமே ஒருவர் அதைப் பெற முடியும். இல்லையென்றால், அவரது வாழ்க்கை பல தடைகளை தாண்டி தான் நகர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு காலதேவி அருள் புரிகிறாள். பஞ்சபூதம், 9 கிரகங்கள், 27 நட்சத்திரம், முப்பது முக்கோடி தேவர்கள் என்று அனைத்துமே காலதேவியின் ஆற்றலுக்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டவை.

இவ்வளவு ஏன், காலச்சக்கரத்தை இயக்கும் தலைவியே இவள் தான். ஜாதகத்தில் கெட்ட நேரம் கொண்டவர்களுக்கு இவளது கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறிவிடும். ஜாதக்காரரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் கோயில் என்பதால், இந்த கோயிலுக்கு நேரக்கோயில் என்ற பெயர் இருக்கிறது.

இந்த கோயிலில் எண்கோண வடிவ கருவறை உள்ளது. விமானமும் எண்கோண வடிவத்தில் செங்குத்தாக உள்ளது. கால சக்கரத்தை குறிக்கும் வகையில் காலதேவியானவள் அபய வரதஹஸ்த முத்திரைகள் உடன் அமர்ந்து காட்சி தருகிறாள்.

பொதுவாக ஒவ்வொரு கோயில்களிலும் காலையில் நடை திறந்து பூஜை செய்யப்பட்டு இரவில் சாற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்த காலதேவி கோயிலில் சூரியன் மறைந்த பின்பு நடை திறக்கப்பட்டு இரவு முழுவதும் கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

காலச்சக்கரத்தை குறிக்கும் காலதேவி என்ற பெயரில் வேறு எங்குமே கோயில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இந்த கோயிலும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மேலும் மாசி மாதம் வரும் பௌர்ணமி நாளில் வருஷாபிஷேகம் செய்யப்படுகிறது.

வழிபாடும் முறை:

காலதேவி கோயிலில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக 11 முறையும், வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக 11 முறையும் சுற்றி வணங்க வேண்டும். சுற்றி வந்த பிறகு கால சக்கரத்தின் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். இறுதியாக காலதேவிக்கு விளக்கேற்றி வழிபட துன்பம் நீங்குவதோடு கெட்ட நேரம் அழிந்து நல்ல நேரம் பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.