கேட்ட வரம் கிடைக்க புழுங்கல் வாரி விநாயகர் வழிபாடு!

170

கேட்ட வரம் கிடைக்க புழுங்கல் வாரி விநாயகர் வழிபாடு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருக்கோவில் பிரசித்திபெற்றது. அந்த ஆலயத்தின் எதிரே ஈசான மூலையில் மாண்டூக நதிக்கரையியில் அமைந்துள்ளது, கற்பக விநாயகர் கோயில். ‘புழுங்கல் வாரி விநாயகர் கோயில்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது.

முன்காலத்தில் தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரு வணிகர் இருந்தார். அவர் தன்னுடைய வியாபாரம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தான் நினைத்த காரியம் வெற்றிபெற வேண்டும் என்றும் நினைத்து விநாயகரை வழிபட்டார்.

அப்போது அங்கே ஓர் அசரீரி ஒலித்தது. “உன் வேண்டுதல்கள் நிறைவேறும். என்னை இங்கிருந்து தூக்கிச்செல்” என்றது அந்தக் குரல். வணிகரும் அந்த அசரீரியின் வாக்குப்படியே, விநாயகர் சிலையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். அப்படி தூக்கிக்கொண்டு செல்லும்போது, பாரம் தாங்காமல் மாண்டூக நதிக்கரை அருகே அந்தச் சிலையை கீழே வைத்து விட்டார். பின்னர் அங்கிருந்த ஆன்மிக அடியார் ஒருவரிடம் நடந்தவற்றை கூறினார்.

அந்த அடியார், ஒரு அர்ச்சகரை அழைத்து வந்து, தினமும் விநாயகருக்கு வழிபாடுகள் செய்யும்படி கூறினார். அதன்படியே அந்த அர்ச்சகரும் வழிபாடு செய்து வந்தார். ஆனால் விநாயகரின் வழிபாட்டிற்கு அரிசி தேவைப்பட்டது. அது பற்றி அந்த அர்ச்சகர், அடியாரிடம் கேட்டார்.

மறுநாள் காலை விநாயகர் சிலை அருகே ஒரு படி புழுங்கல் அரிசி இருந்தது. வீட்டில் இருந்து அப்போதுதான் வந்த அர்ச்சகர், அந்த அரிசியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அங்கு யாராவது இருக்கிறார்களா.. என்று தேடிப்பார்த்தார். யாரும் இல்லை. அப்போது விநாயகரின் சிலைக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது. “அந்த அரிசியை எடுத்து பூஜை செய். நீ வரும் முன்பாக இங்கே தினமும் ஒரு படி அரிசி இருக்கும்” என்றது.

அர்ச்சகரும் அந்த அரிசியைக் கொண்டு நைவேத்தியம் செய்து விநாயகருக்கு படைத்து பூஜைகளை செய்தார். பின்னர் அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். தன்னுடைய வழிபாட்டிற்காக இறைவனே புழுங்கல் அரிசியை வழங்கியதால், இத்தல விநாயகருக்கு ‘புழுங்கல் வாரி விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

இன்று வரை பக்தர்கள் மூலமாக இந்த விநாயகருக்கு தினமும் புழுங்கல் அரிசி வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த விநாயகரை வழிபாடு செய்தால் கேட்ட வரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் இந்த விநாயகரின் மீது, சூரியனின் ஒளி படும் விதத்தில் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் தாமரைப் பூவிற்குள் இருந்தபடி அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்கலாம். லிங்கத்திற்குள் பராசக்தியின் உருவம் பொறிக்கப்பட்ட அமைப்பும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் பல விதமான யாகங்கள் நடத்தப்படுகின்றன. ஒரே கல்லில் விநாயகரும், ஆஞ்சநேயரும் வடிக்கப்பட்ட சிலை அற்புதமாக உள்ளது. இதற்கு ‘ஆதியந்தபிரபு’ என்று பெயர். ஆக்ரோஷத்திற்கு பெயர் போன துர்க்கை அம்மன், இங்கு ஆனந்த துர்க்கையாக புன்முறுவல் பூத்தபடி அருள்கிறாள்.