கேரளாவில் பூக்களின் திருவிழா!

88

கேரளாவில் பூக்களின் திருவிழா!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கேரளாவில் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால், இந்த மாதத்தை அதுவும் திருவோணம் திருநாளில் விதவிதமான பூக்கள் கொண்டு கோலமிடுகின்றனர். இதற்கு பூக்களின் திருவிழா என்று பெயர்.

கேரளாவின் அறுவடை திருநாள்:

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கேரளாவில் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க திருவிழா ஓணம். சங்க காலத்தில் விஷ்ணுவின் பிறந்தநாள் என்றும், வாமணன் அவதரித்த நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் கொண்டாடப்படும் பண்டிகை. இதனை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கின்றனர்.

10 நாள் திருவிழா:

கொல்லர் வர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் முடியும் வரை இருக்கும் 10 நாட்களும் ஓணம் பண்டிகையாக கொண்டாப்படுகிறது.

பருவ மழைக் காலம் முடிந்ததும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஓணமும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

மன்னனுக்கான கொண்டாட்டம்:

கேரளாவை மகாபலி என்ற மன்னன் சிறப்போடு ஆட்சி செய்து வந்தார். தானம், தர்மங்கள் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார். புராணக் கதையின்படி வாமணனாக (குள்ள உருவில்) வந்த திருமால் மகாபலியிடம் மூன்றடியில் மண் கேட்டார். தானம், தர்மங்கள் செய்வதில் வல்லவரான மகாபலியும் 3 அடியில் மண் தந்தார்.

ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் இந்த விண்ணையும் அளந்த திருமாலுக்கு 3ஆவது அடியாக தனது தலையையே கொடுத்தான் மகாபலிராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவனது தலையில் தனது காலை வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

ஏனென்றால், செல்வத்தில் மதிப்பாக பாதாள உலகம் கருதப்பட்டது. தன் நாட்டு மக்கள் மீது மகாபலி மிகுந்த அன்பு கொண்டிருந்தமையால், ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான். அதன்படியே திருமால் தந்தருளினார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் திருவோண திருநாள் கொண்டாடப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், திருவோண திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூமிக்கு வந்து மக்களை பார்ப்பதோடு அவரவர் வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்களின் நம்பிக்கை. இதன் விளைவாக மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் திருவோண திருநாள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் ஸ்பெஷல் (ஓண சாத்யா):

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் செய்யப்படும். கானம் விற்றாவது ஓணம் உண் என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை பறைசாற்றுகிறது.

ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற அனைத்து சுவைகளிலும் 64 வகையான ஓண சாத்யா என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புதிய அரிசி மாவு கொண்ட தயாரிக்கப்பட்ட அடை, அவியல், அடை பிரதம்ன், பால் பாயாசம், அரிசி சாதம், சாம்பார், காலன், ஓலன், பருப்பு, நெய், மோர், தோரன், ரசம், சர்க்கரப் புரட்டி, பச்சடி, கிச்சடி, கூட்டு, பரங்கிக்காய் குழம்பு பப்படம், எரிசோரி, மிளகாய் அவியல், இஞ்சிப்புள்ளி, சீடை, ஊறுகாய் என்று சாப்பாடு தயார் செய்து கடவுளுக்குப் படைக்கப்படும்.

ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்:

திருவோணம் பண்டிகையின் போது மகாபலி மன்ன்னை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீடுகளிலும் அத்தப்பூ என்ற பூக்கோலம் போடப்படும். முதல் நாளில் ஒரு வகையான பூக்கள் கொண்டும், 2ஆம் நாளில் ஒரு வகையான பூக்கள் கொண்டும்….அப்படியே தொடர்ந்து 10 நாட்களும் ஒவ்வொரு வகையான பூக்களால் கோலம் போடுவார்கள்.

பூக்களின் திருவிழா:

கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதம். அதனால், இந்த மாதத்தில் வரும் திருவோண திருநாளை பூக்களின் திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர்.

பெண்களின் ஆடை (கசவு)

கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.

விளையாட்டு போட்டி:

10 நாட்களாக நடைபெறும் திருவோண திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக சொல்லபோனால், களறி, படக்குப் போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.