சகல சௌபாக்கியங்கள் கிடைக்க ஐஸ்வர்ய முருகன் வழிபாடு!

77

சகல சௌபாக்கியங்கள் கிடைக்க ஐஸ்வர்ய முருகன் வழிபாடு!

சென்னை மாவட்டம் குரோம்பேட்டை அருகிலுள்ள குமரன் குன்றம் என்ற ஊரில் உள்ளது பாலசுப்பிரமணியர் கோயில். இந்தக் கோயிலில் பாலசுப்பிரமணியர் (சுவாமிநாதசுவாமி) மூலவராக காட்சி தருகிறார். குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால், இந்த ஊர் குமரன்குன்றம் என்றழைக்கப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் இந்தக் கோயிலில் உள்ள 120 படிகளுக்கும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பொதுவான தகவல்:

ஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் மூலவர் கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் மலையில் வற்றாத குமார தீர்த்தம் இருக்கிறது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமி கிரிவலம் வருகிறார்.

திருமணமத் தடை நீங்கவும், புத்திர தோஷம் நீங்கவும் பாலசுப்பிரமணியரை வழிபாடு செய்கின்றனர். பாலசுப்பிரமணியர் (முருகன்) வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக மங்களப் பொருட்கள் கொண்டு இவரை வழிபாடு செய்கின்றனர். ஆதலால், இவர், ஐஸ்வர்ய முருகன் என்று அழைக்கப்படுகிறார்.

தல பெருமை:

திருநீர்மலை, திரிசூலம் ஆகிய மலைக்கோயில்களுக்கு நடுவில் இந்த பாலசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. கோயில் இருக்கும் மலையின் அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் உள்ள காளி ஜெயமங்களதன்மகாளி என்று அழைக்கப்படுகிறாள்.

தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு ஜெயமும் (வெற்றி), மங்களமும் சாந்தமாக தந்து அருள்பவள் என்பதாள் இந்த காளிக்கு ஜெயமங்களதன்மகாளி என்று பெயர். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காளிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகப் பெருமான் யானை வாகனத்தில் உலா வருகிறார்.

மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் தான் சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் வடக்கு நோக்கிய சன்னதியில் காட்சி தருகிறார். அம்பாள் மீனாட்சிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், நடராஜர் வலது காலை தூக்கி நடனமாடியபடி இருப்பது போன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவசக்தியின் அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. ஆகையால், நடராஜரை தன் பாதம் தூக்கிய நடராஜர் என்று அழைக்கிறார்கள்.

தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வெறும் குன்று மட்டுமே இருந்துள்ளது. ஒரு நாள் இந்தப் பகுதிக்கு வந்த காஞ்சிப் பெரியவர் இந்த மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையடுத்து, ஒரு சிலர் அந்தப் பகுதியை சீர்படுத்தினர். அப்போது, அங்கு ஒரு வேல் கிடைத்துள்ளது. அதனை அங்கேயே வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன் பிறகு முருகப் பெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டது. அதற்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.