சந்திர தரிசனம் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

49

சந்திர தரிசனம் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

நாளை (28-08-22 ஞாயிற்றுக்கிழமை) சந்திர தரிசனம் கண்டால் தீராத நோய்கள் நீங்கும். வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாளைய தினம் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம தரிசனம் பண்ண வேண்டும்.

சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். கோயிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.

சிவபெருமான் தன் தலையில் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே இந்த வளர்பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் திருமுடியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். வளர்பிறை சந்திரனை தரிசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.

அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் சந்திர பகவான் வளர்பிறையாக தனது பயணத்தை துவங்குகிறார். துவிதியை நாளில் மாலையில் சந்திர தரிசனம் என்று அழைக்கிறார்கள். பிறைச் சந்திரனை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

சந்திரனை தரிசன பலன்கள்:

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். சந்திரனே மனதிற்கு அதிபதி. சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

சந்திரனை வணங்கிய பலன்:

சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும் ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6,8,12ஆம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி,ராகு, கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந்தோ இருந்தால் சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

சந்திர தோஷம்:

ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன், கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

முற்பிறவி பாவம் போக்கும்:

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.

பார்வை கோளாறுகள் நீங்கும்:

சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும். செல்வமும் சந்தோஷமும் தேடி வந்து அமையும். பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பார்வை கோளாறுகள் நீங்கும்.

மாங்கல்ய பலம் பெருகும்:

சந்திரனை தரிசிக்கும் நேரத்தில் கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது. சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.

ஆயுளை யாசகமாக கேளுங்கள்:

சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி mஅதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள் ஆயுள் அதிகரிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

ஆயுள் விருத்தியாகும்:

நோய்கள் மதம் பார்த்து நம் உடம்புக்குள் நுழைவதில்லை எனவே இந்து மதம் மட்டுமல்லாது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம்,என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.அவரவர் வீட்டில் இருந்து சந்திரனை தரிசனம் செய்து வணங்குங்கள்.நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.