சனி தோஷம் நீக்கும் சனி மஹா பிரதோஷம்!

97

சனி தோஷம் நீக்கும் சனி மஹா பிரதோஷம்!

ஒவ்வொரு கிழமையிலும் பிரதோஷம் வரும். ஆனால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனி சிறப்பு உண்டு. சனிக்கிழமையில் வரும் பிரதோஷ காலங்களில் சிவனை தரிசித்தால், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும். செல்வாக்கு கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷ நாளில் செய்யும் தானமும் அளவில்லாத பலனைக் கொடுக்கும். இவ்வளவு ஏன், மறுபிறவி இல்லாத முக்தியைக் கொடுக்கும்.

அந்த வகையில், இன்று செப்டம்பர் 04ஆம் தேதி சனிக்கிழமை, மஹா பிரதோஷம். பொதுவாக சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாள். அப்படி இந்த நாளில் சிவன், நந்தியை வழிபாடு செய்வதோடு, சனி பகவானையும் வழிபட சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். தோஷ நிவர்த்திக்கான பிரதோஷமாக இந்த சனி மஹா பிரதோஷம் கருதப்படுகிறது.

முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள், நோய்கள் ஆகியவை சம்பளமாக கிடைக்கிறது. செய்த பாவங்கள் அனைத்தும் தீர இந்த ஜென்மத்தில் புண்ணியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்க கோயிலுக்கு சென்று அபிஷேகம் செய்யும் பொருட்கள் வாங்கி தரலாம். சனி மஹா பிரதோஷ் நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலமாக முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு, நோய்களும் வராமல் தடுக்கப்படும். மேலும், ஆரோக்கியமான வாழ்வும் அமையும்.

நித்திய பிரதோஷம், பக்‌ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்று பிரதோஷங்கள் 5 வகைப்படும். இதில், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்றும் சனி மஹா பிரதோஷம் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி நாட்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபட்டு வந்தால் ஒரு வருடத்திற்குரிய பலன் கிடைக்கும். மேலும், சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவனை வழிபாடு செய்தால் கிட்டத்தட்ட 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும்.