சரியான தூக்கம் கிடைக்க சனி பகவான் வழிபாடு!

126

சரியான தூக்கம் கிடைக்க சனி பகவான் வழிபாடு!

இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா? சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்.

பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.

சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அப்படியில்லை என்றால் கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.

தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.