சாபம் நீங்க இந்திரன் காக வடிவத்தில் குளம் அமைத்த கோயில்!

65

சாபம் நீங்க இந்திரன் காக வடிவத்தில் குளம் அமைத்த கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயில் காக்கா குளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் விநாயகர் மூலவராக காட்சி தருகிறார்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே…!

தலங்கள் தோறும் பல காரணங்களைப் பெற்ற முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான் சிவ ராஜதானி என்று போற்றப்படும் நாகப்பட்டினம் நகரின் மையப்பகுதியில் தனிக் கோயிலாக சாபம் தீர்த்த விநாயகர் எனும் காக்கா குளம் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஆதி காயாரோகணம் எனும் சட்டநாத சுவாமி கோயிலின் உப கோயிலாக அதன் எதிரே நீலா மேல வீதியில் இந்தக் கோயிலானது அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கருங்கல் திருப்பணிகளால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை இந்திரன் அடைய எண்ணி, முனிவரின் குடிலின் அருகே காக்கை உருவெடுத்து கரைந்தான். கௌதம முனிவரும் பொழுது விடிந்து விட்டதாக எண்ணி வெளியே சென்றுவிட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நாடினான்.

நடப்பவையெல்லாவற்றையும் தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த கௌதம முனிவர் அகலிகை, இந்திரன் ஆகியோரை சபித்துவிடுகிறார். அதன் பிறகு இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி சாப விமோசனம் பெற காக்கை உருவிலேயே நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரு தீர்த்தம் அமைத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபட்டான்.

இந்திரனின் சாபம் தீர்க்க வழி செய்ததால் சாபம் தீர்த்த விநாயகர் என்றும், இந்திரன் காக வடிவத்தில் அமைத்த குளத்தின் அருகே உள்ளதால் காக்கா குளம் பிள்ளையார் என்றும் தற்போது அதுவே மருவி காக்கா பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது. திருநள்ளாறில் சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெறாத நள மஹாராஜா பின் இந்தக் கோயிலில் காக்கா குளத்தில் நீராடி விநாயகரை வழிபட்டு சனி பகவானால் காலில் ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்தக் குளம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவானும் இந்த விநாயகரை வழிபட்டு புத்திர சந்தானம் குழந்தை பாக்கியத்தை பெற்றதால் மார்ச் மாத இறுதி வாரங்களில் அஸ்தமனத்தின் போது சூரியக் கதிர்கள் விநாயகரின் மீது படும்படி சூரிய பூஜை செய்யப்படுகிறது.

மேலும், இந்திரனும், சூரியனும் அஞ்சலி முத்திரையில் கை கூப்பி விநாயகரை தொழுத வண்ணம் அமைந்திருப்பது எந்த கோயிலிலும் காண முடியாத அமைப்பாகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சிறப்பு வழிபாடுகளும், ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி நாளில் உற்சவமும் நடைபெறுகிறது. மேலும், இந்தக் கோயிலின் தனி சிறப்பான சூரிய பூஜை மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலுக்கு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் எல் ஐ சி ஸ்டாப்பிங்கில் இறங்கி இந்தக் கோயிலை அடையலாம்.