சாப்பிட்ட வாழை இலையில் அங்கப்பிரதட்சணம்!

172

சாப்பிட்ட வாழை இலையில் அங்கப்பிரதட்சணம்!

கர்நாடகா மாநிலத்தில் மங்களூர் அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டில் குமார மலை எனப்படும் குக்கி சுப்ரமண்ய என்ற கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. குக்கி கிராமத்தில் இருப்பதால், இந்த ஊர் மக்கள் குக்கி சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கின்றனர். குமார மலையை பாதுகாக்கும் வகையில் ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷமலை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவரான சுப்பிரமணியசுவாமியை அனைத்து பாம்புகளும் தங்களது குல தெய்வமாக வழிபட்டுவருவதாக கூற்ப்படுகிறது. புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய பாம்புகளின் குலத்திற்கே தலைவியான வாசுகி உள்பட அனைத்து பாம்புகளுமே குக்கி சுப்பிரமணியசுவாமியை குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தல வரலாறு:

சூரபத்மன், தாருகாசுரன் உள்பட கொடி அரக்கர்களை போரில் வென்ற சுப்பிரமணியசுவாமி தனது அண்ணனான கணபதி உள்பட மற்ற தெய்வங்களுடன் இந்த குமார மலையில் தங்கினார். அப்போது, தேவர்களுக்கு எல்லாம் தலைவனாக விளங்கிய இந்திரன் உள்பட மற்ற தேவர்கள் எல்லாம் சுப்பிரமணியசுவாமியை மகிழ்ந்து வரவேற்றனர். பின்பு, இந்திரனோ, தனது மகளான தேவசேனாவை (தெய்வானை) சுப்பிரமணியசுவாமிக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். அவரது ஆசைப்படியே குமார மலையில் சுப்பிரமணியசுவாமி தேவசேனாவை மணந்தார்.

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் எழுந்தருளி தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அன்று முதல் குமார மலையில் உள்ள குக்கி சுப்பிரமணிய கிராமத்தில் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

குக்கி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்:

குமார மலையில் எழுந்தருளியுள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் குமாரதாரா என்ற நதியில் நீராடிவிட்டு தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். மேலும், கோயிலின் உள்ளிருக்கும் கருடனின் வெள்ளித்தூணை வலம் வர வேண்டுமாம். ஏனென்றால், வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபட்டால் பாம்புகள் வெளிவிடும் விஷத்தை எதிர்கொள்ள முடியும் என்பது நம்பிக்கை. காரணம், குக்கி சுப்பிரமணியசுவாமி பாம்புகளின் குல தெய்வமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நம்பூதிரிகள் வாழை இலையில் விருந்து படைத்து அதனை அவர்கள் சாப்பிடுகிறார்கள். அதன் பிறகு அந்த வாழை இலைகளை வரிசையாக வைத்து அந்த வாழை இலைகள் மேல் அங்கப்பிரதட்சணம் செய்தால் நன்மை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நாக தோஷ நிவர்த்தி பரிகாரம்:

குக்கி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாக தோஷ நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜைக்கு சர்ப்ப சம்கார பூஜை என்று பெயர். நாக தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.