சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்ளலாமா?

147

சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்ளலாமா?

தீய சக்திகள், பிரச்சனைகள் தலைதூக்கும் போது கோயில்களில் ஹோமம், யாகம் செய்வார்கள். இது தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அவரவர் வீடுகளிலும் ஹோமம், யாகம் வளர்ப்போம்.

வேதங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஹோமங்களுக்கு வைதீக முறை என்று பெயர். இந்த வகை ஹோமங்களில் இறைவனை அக்னி (தீ) ஆவாஹனம் (இறைவனை அழைப்பது) செய்வதில்லை. எந்தக் கடவுளை நினைத்து நாம், ஹோம்ம் வளர்க்கிறோமோ நாம் கொடுக்கும் அஹூதியை கடவுளிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியைத் தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில், ஒரு சில குறிப்பிட்ட பொருட்களைத் தான் ஹோமத்தில் போட வேண்டும்.

ஆனால், ஆகம வழிபாடு அல்லது சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படி செய்யப்படும் ஹோமங்களில் தான் அக்னியில் இறைவனை ஆவாஹம் செய்வார்கள். இதில், அக்னி ரூபத்தில் வரும் இறைவன் நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்று கொள்வதாக ஐதீகம். இதில், பழங்கள், புஷ்பம், வஸ்திரம் ஆகியவற்றை ஹோம குண்டத்தில் போடலாம்.

இந்த முறையில், கடைசியாக, பட்டுத் துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டையாக கட்டி அதனை பூர்ணாஹுதி செய்வார்கள். ஆபரணம் சமர்ப்பயாமி என்று கூறும் போது தங்கம், வெள்ளி உள்பட எளிதில் உருகக் கூடிய உலோகங்களை ஹோம குண்டங்களில் போடலாம்.

பூர்ணாஹுதி செய்யும் போது சில்லரை காசு போடுவதை தவிர்க்க வேண்டும். எளிதில், எரிந்து சாம்பலாகக் கூடிய பொருட்களைத் தான் நாம் யாக குண்டங்களில் போட வேண்டும். ஹோம குண்டங்களில் எரிந்து சாம்பலாவதைத் தான் நாம் எடுத்து அதனை பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நெற்றியில் பூசிக் கொள்ளலாம். மஞ்சள் துணியில் கட்டி வீட்டு வாயிற்படியிலும் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.