சாளக்கிராமம் கல் என்பது என்ன?

53

சாளக்கிராமம் கல் என்பது என்ன?

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும். அதாவது   கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் கல் அச்சு. இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

சாளக்ராமம் தோன்றிய கதை:

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள். அங்கு விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார். பெண்ணே நீ கண்டகி நதியாகப் பிறந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

இந்தக்தையின் உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம்.

சாளக்ராம மகிமை:

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு வீரன் (க்ஷத்ரியன்) எதேச்சையாக ஒரு சாளக்ராம கல்லை வாயில் வைத்து கொண்டு நீந்தி வந்தார். அவருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது. அவருக்கு அரச பதவியும் கிடைத்தது. பின்னர் விஷ்ணுவே வந்து மேக ரூபமாக அவரை சுவர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு கண்டகி நகர சாளக்கிராம கற்களின் மகிமை உலகிற்குத் தெரிந்தது. இப்பொழுது அது பஞ்ச்சாயதன பூஜையின் ஒரு பகுதியாக இந்துக்களின் வீட்டின் பூஜை அறையில் உள்ளது.

சாளக்கிராம கல்லை மதிப்பிடுவது எப்படி?

சாளக்கிராம கற்களை எடுக்கும் உரிமை அந்தக் காலத்தில் நேபாள மன்னர்களிடம் மட்டுமே இருந்தது. அவர்கள் அந்த உரிமையைக் குத்தகைக்கு விடுவர். ஆனால் யார் அவற்றைக் கண்டுபிடித்தாலும் அதை அரசரிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் அதிலுள்ள சக்கரம், குறிப்பிட இடத்திலுள்ள ஓட்டை இவற்றைக் கொண்டு மதிப்பிடுவர். அதற்குப் பின் அதைச் சுத்தம் செய்துவிட்டு ஒரு தராசின் ஒரு தட்டில் வைப்பர். ஒவ்வொரு கல்லுக்கும் சமமான அரிசியை மற்றொரு தராசுத் தட்டில் வைப்பர். மறு நாள் (24 மணி நேரத்தில்) அரிசியின் எடை அதிகரித்து அந்தத் தட்டு கீழே தாழ்ந்திருந்தால் அதன் மதிப்பு அதிகம். அரிசியின் அளவு இரு மடங்கு கூட ஆனதுண்டாம். அரிசியின் அளவு அதே மாதிரி நீடித்தாலோ அல்லது குறைந்தாலோ சாளக்கிராமத்துக்கு மதிப்பில்லை.

அதர்வ வேதத்தில் சாளக்ராமக் கல்:

சாளக்ராமக் கல் இல்லாத வீடு சுடுகாட்டுக்குச் சமம் என்றும் அங்கே சமைக்கப்பட்ட உணவு நாயின் விட்டைக்குச் சமம் என்றும் அதர்வண வேதம் கூறுவதாக சொல்கிறார்கள். .சாளக்ராமக் கல்லின் அபிஷேக நீர்  மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அதை அபிஷேகம் செய்து ஆராதிப்போர் வீ ட்டில் லட்சுமி நிரந்தரமாகக் குடியிருப்பதால் செல்வம் தழைக்கும் என்றும் இந்துக்கள நம்புகின்றனர்.

கந்த புராணத் தகவல்:

கந்த புராணத்தில்தான் சாளக்ராம மகிமை கூறப்பட்டிருக்கிறது. இதை வீட்டில் வைத்திருந்து பூஜை செய்யாமல் இருந்தால் துரதிருஷ்டம் பீடிக்கும். சாளக்ராமத்தில் உக்ர சக்ரசாளக்ராமங்கள் என்பன தீய விளைவுகளை ஏற்படுத்துமாம். அப்படி தீய விளைவை உண்டாக்கும் கற்கள் இருந்தால் அவைகளை க் கோவில்களில் கொடுத்து  விட்டால் ஒரு கஷ்டமும் வராது. கோவிலிலுள்ள மகத்தான சக்தி, பூஜைகளால் அவை உக்ரம் இழந்துவிடும்.

இறுதியாக சாலக்கிராமத்தில் போலி கற்களும் உண்டு. அதாவது மோசடி செய்வோர் அதன் மீது கருவிகளால் கோடு, ஓட்டைகளைப் போட்டு அவறறை சாளக்ராமம் என்று விற்பர். இவைகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. எனவே கவனமாக பார்த்து வாங்கவேண்டும்.