சின்ன பாவம் எது? பெரிய பாவம் எது?

68

சின்ன பாவம் எது? பெரிய பாவம் எது?

ஞானி ஒருவர் இருந்தார். அவரைப் பார்க்க 2 பேர் வந்தனர். அப்போது ஒருவன் வருத்தத்தோடு கேட்டான். நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினந்தோறும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா? மற்றொருவன் சொன்னான். நான் இவர் அளவுக்கு பெரிய பாவம் ஒன்றும் செய்யவில்லை. சின்ன சின்ன பொய்கள், சிறு ஏமாற்று வேலைகள் என்று நிறைய செய்துள்ளேன்.

தண்டிக்கும் அளவிற்கு இவை பெரிய பாவங்களா? என்று கேட்டான். இதையடுத்து ஞானி சிரித்தார். முதலில் கேட்ட ஒருவனிடம், நீ போய் பெரிய பாறை ஒன்றை தூக்கி வா என்றார். இரண்டாவது கேட்டவனிடம் நீ சென்று இந்த கோணி நிறைய சிறு சிறு கற்களை எடுத்து வா என்றார். இருவரும் ஞானி கூறியவாறே செய்தனர். ஞானி கூறியவாறு முதல் ஒருவன் பெரிய பாறையை தூக்கி வந்தான்.

மற்றொருவன் கோணி நிறைய சிறு சிறு கற்களை எடுத்து வந்தான். இப்போது ஞானி சொன்னார். சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை எங்கிருந்து எடுத்து வந்தீர்களோ அங்கேயே திரும்ப போட்டுவிட்டு வாருங்கள் என்றார். பாறையை எடுத்து வந்தவன், அதனை எடுத்த இடத்தில் வைத்து விட்டு திரும்பினான்.

கற்களை எடுத்து வந்தவன் தயக்கத்துடன், அவற்றை எப்படி சரியான இடத்தில் வைக்க முடியும் என்று கேட்டான். ஞானி சொன்னார். முடியாது அல்லவா! அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக மனம் வருந்தி அழுது மன்னிப்பு கேட்டு அதற்குரிய பரிகாரம் செய்து அதிலிருந்து மீட்சி அடைந்தான். நீ சின்ன சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் அவை கூட பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.

அவனுக்கு மீட்சி சுலபம். ஆனால், உனக்கு தான் மீட்சி என்பது மிகவும் கடினம் என்றார். இதிலிருந்து பாவத்தில் சிறிது ஒன்றும் இல்லை, பெரிது ஒன்றும் இல்லை. பாவம் பாவம் தான். அதற்கு பரிகாரம் மட்டுமே பலன் தரும். அதற்காக பாவம் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ பாவங்கள் செய்துவிடக் கூடாது என்பது தான் அதற்குரிய பரிகாரம்.