சிம்ம ராசிக்காரர்கள் சென்று வர வேண்டிய சிவன் கோயில்!

58

சிம்ம ராசிக்காரர்கள் சென்று வர வேண்டிய சிவன் கோயில்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் அவணீஸ்வரர் அல்லது சிம்மபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சிம்மபுரீஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். மங்களாம்பிகை தாயார் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம் ஆகிய நாட்கள் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. ஆவுடையார் மீது மரகதத் திருமேனி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. மங்களாம்பிகை என்ற திருப்பெயருடன் அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவன் சன்னதிக்கு முன்பாக நந்தீஸ்வரர் அழகிய வடிவத்துடன் காட்சியளிக்கிறார்.

பன்னிரு கரங்களுடன் காட்சி தரும் ஆறுமுகப் பெருமான் பெருமாள் அம்சம் கொண்டவராக காட்சி தருகிறார். கையில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத அதிசயமாக இங்கு காணப்படுகிறது. இது சிம்ம ராசிகளுக்குரிய தலமாக அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மனுக்கு அவனி நாராயணன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வியாபாரம் விருத்தியடையவும் பக்தர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். இது தவிர, நமது வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

அத்திரி முனிவர் – அனுசுயா தம்பதிகளின் புத்திரர் ஏரண்டர். அவர் காக புஜண்டரின் சீடர். இம்முனிவர் சிவனை வேண்டி தவம் செய்வதற்கு உரிய இடம் தேடி அலைந்தார். ஒரு இடத்தில் சிம்மம் ஒன்று அமைந்திருப்பது போன்ற தோற்றத்துடன் ஒரு மலையையும் அதையொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அங்கேயே கடும் தவம் புரிந்தார்.

முனிவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் அவருக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். அந்த இடமே முற்காலத்தில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்டு தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஏரண்ட முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, சிம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் வீற்றிருந்த அந்த கோயில் நாளடைவில் சிதிலமடைந்து மண்ணோடு மறைந்து போனது.

பிற்காலத்தில் ஆதிசங்கர பகவத்பாதர் நாடு முழுவதும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டார். அப்போது இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அவரது கனவில் ஏரண்ட முனிவர் தோன்றி தான் சிம்மபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்த விவரத்தை உணர்த்தியதாகவும், சங்கரரும் மண்ணில் புதையுண்ட போன அந்த லிங்கத்தை கண்டெடுத்து தமது திருக்கரங்களாலேயே திரும்ப பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர் பூஜித்து வழிபட்ட அந்த ஈசனுக்கு ஆவணிஸ்வரர் என்ற பெயர் சூட்டி கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளார்.