சிவனின் 9 விரதங்கள்: திருமணம் நடக்க கல்யாண விரதம்!

138

சிவனின் 9 விரதங்கள்: திருமணம் நடக்க கல்யாண விரதம்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. பிரதோஷ விரதம்
  2. சோமவார விரதம்
  3. உமா மகேஸ்வர விரதம்
  4. திருவாதிரை விரதம்
  5. மகாசிவராத்திரி விரதம்
  6. கல்யாண விரதம் (கல்யாண சுந்தரர், கல்யாண சுந்தர விரதம்)
  7. பாசுபத விரதம்
  8. அஷ்டமி விரதம்
  9. கேதாரகௌரி விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது கல்யாணசுந்தரர் விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

கல்யாணசுந்தரர் விரதம்:

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமியில் கல்யாண சுந்தரர் (கல்யாண சுந்தர, கல்யாண) விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினம் தான் பங்குனி உத்தரம். இந்த நாள் முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படுகிறது. சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் சோமசுந்தரர் என்றும், மீனாட்சி என்றும் நாம்ம் கொடுத்து திருமணம் செய்வித்த நாள் பங்குனி உத்தரம்.

பங்குனி உத்தர கல்யாண திருவிழா பசுவாகிய ஆன்மாவையும் பதியாகிய சிவத்தையும் இணைப்பதாக எடுத்துகாட்டுகிறது. இந்த நாளில் சிவபெருமானை எண்ணி தேவர்கள் விரதமிருப்பார்கள். பகல் முழுவதும் சாப்பிடாமல், இரவில் பாலும், பழமும் உட்கொண்டு விரதங்களை அனுஷ்டிப்பார்கள். இதற்கு கல்யாண சுந்தர விரதம் என்று பெயர்.

இந்த பங்குனி உத்தர நாளில் ராம பிரான் சீதா தேவியை கரம் பிடித்தார். முருகன், தெய்வானையை மணந்தார். ஆண்டாள், திருவரங்கநாதர் உள்பட தெய்வங்களின் திருமணம் பங்குனி உத்தர நாளில் தான் நடந்துள்ளது. இதன் காரணமாக பங்குனி உத்தரம் விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.

இந்த விரதம் மேற்கொள்ளும் திருமணமாகாத ஆணுக்கும், பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.