சிவனுக்கு நாகலிங்க பூ வைத்து பூஜை செய்வது ஏன்?

51

சிவனுக்கு நாகலிங்க பூ வைத்து பூஜை செய்வது ஏன்?

பூவுக்குள் லிங்கம் இருப்பது போன்றும், அதனை நாகம் போன்று குடையாக வந்து பிடிப்பது போன்றும் இருக்கும் பூ தான் நாகலிங்க பூ. நாகலிங்க மரத்தின் மீது கொத்து கொத்தாக பூத்திருக்கும் இந்த நாகலிங்க பூவிற்கு அதிக மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால், இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது சிவனுக்கு நாகலிங்க பூ வைத்து பூஜை செய்வது பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் தான். தினசரி நாகலிங்க மரத்தின் தரிசனம் கிடைத்தால் அதை விட பாக்கியம் வேறு எதுவுமில்லை.

நாகலிங்க பூவை பூஜைக்கு அளித்தால் மிகப்பெரிய புண்ணிய கிடைக்கும். இந்தப் பூவைக் கொண்டு பூஜை செய்யும் போது பூஜைக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும், அன்னதான, செய்ய வேண்டும். இந்த மரமானது யோக அக்னியை போல் இருக்கும். இந்தப் பூவை மரத்திலிருந்து பறிக்கும் போது ஒரு விதமான வெப்பமாய் இருக்கும்.

ஒவ்வொரு பூவும் ஒருவிதமான உள்சூட்டுடன் இருக்கும். இதற்கு யோக புஷ்ப தவச்சூடு என்று பெயர். இது மனித மூளைக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. சூரியக் கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்களின் யோக சக்தியைக் கொண்டே ஒவ்வொரு நாகலிங்க பூவும் மலர்வதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகலிங்க பூவிற்கு 21 ரிஷிகள் தங்களது தவ வலிமையை அளித்துள்ளார்கள் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. சிவலிங்க பூஜைக்கு வில்வம் எப்படி முக்கியமோ அதே போன்று நாகலிங்க பூவும் முக்கியம். சிவனுக்கு படைத்து பூஜை செய்த நாகலிங்க பூ எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.

நாகலிங்க பூவை கையில் எடுக்கும் போது 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அந்த 21 பேரும் மாத்ருகா ரிஷிகள் என்று கூறப்படுகிறது. சிவனுக்கு பூஜித்த நாகலிங்க பூவை நாம் குளித்து முடித்த பிறகு தான் கையாலேயே தொட வேண்டும். அதன் பிறகு கடலிலோ அல்லது ஓடும் ஆற்றிலோ விடலாம்.

இல்லையென்றால், அந்த பூவை கொண்டு வந்து வீட்டு பூஜையறையில் வைத்து பூஜிக்க வேண்டும். நமது வேண்டுதல் நிறைவேறும் வரையில் அந்தப் பூ எவ்வளவு வாடினாலும் அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு. மேலும், எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் நோயை குணப்படுத்தும் சக்தியும் அந்த நாகலிங்க பூ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.