சிவன் லிங்கமாக இருப்பதன் காரணம் என்ன?

144

சிவன் லிங்கமாக இருப்பதன் காரணம் என்ன?

சிவன் என்றால் மங்களம் என்றும், லிங்கம் என்றால் அடையாளம் என்றும் அர்த்தம். மங்களம் என்பதற்கு சுபம் என்ற மற்றொரு அர்த்தமும் கூட இருக்கிறது. அதாவது, சுபத்தை மனதில் நிறுத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும்.

அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் வந்தது சிவத்தின் இணைப்பால் தான். பனி வடிவமாகவும் காட்சியளிப்பான். இயற்கையில் விளைந்தது பாண லிங்கம். புராணத்தில் தாருகா வானத்தில் ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து அது லிங்க வடிவமாக காட்சியளித்ததாக கூறப்பட்டுள்ளது.

கண்ணப்பனை மெய்யப்பனாகவும், மார்க்கண்டேயனை சிரஞ்சீவியாகவும் மாற்றியது சிவலிங்கம் தான். சிவலிங்கம் தியாகத்தின் பெருமையை சுட்டிக் காட்டுகிறது. நாம் பிறக்கும் போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டி கொண்டு பிறப்பதுமில்லை. இறக்கும் போது எந்தப் பொருளும் ஒட்டுக் கொண்டு வருவதுமில்லை. அப்படியிருக்கும் போது ஏன் ஒட்டாத ஒரு பொருளுக்காக ஒட்டுக்கொண்டு கவலைப்படுகிறோம். என்னில் எந்தப் பொருளும் ஒட்டிக்கொள்வதுமில்லை, ஒட்டுவதுமில்லை என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் அது ஒட்டிக் கொள்ளாது. அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் எந்தப் பொருளும் லிங்கத்தில் தங்குவதில்லை. வஸ்திரம் உடுத்தவும் இயலாது. அணிகலன்கள் அணிய இயலாது. எந்த அடையாளமும் தெரியாததால், அவன் உருவமற்றவன் என்பதைத் தான் சிவலிங்கம் உணர்த்துகிறது.

மௌனமாக இருந்து மனிதனுக்கு உலகிற்கு வழிகாட்டுகிறது. அசையாமல் இருக்கும் சிவலிங்கம் இந்த உலகை அசைய வைக்கிறது. அவன் இல்லாமல், இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது. உடல் உறுப்புகள் இருந்தால், ஆசாபாசங்களில் சிக்கி கிடைத்த பிறவியை பயனற்றதாக போய்விடும்.

ஆசைகளை துறந்தால் நம் உடலுறுப்புகள் அனைத்தும் சிவத்தோடு இணைந்துவிடும். அப்படி இணைந்துவிட்டால் பிறவிப் பயன் கிடைக்கும் என்பதைத்தான் சிவலிங்கம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் நிறைவில் நாம் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். பஜனையின் போதும் மங்களம் பாடுவோம். ஒவ்வொரு படமும் முடியும் போதும் சுபம் என்று தான் கூறி முடிப்பார்கள். மங்களம், சுபம், சிவம் எல்லாமும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் சிவம், எதிலும் சிவம். அது தான் சிவலிங்கம்.