சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷமும், அன்னாபிஷேகமும்…!

99

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷமும், அன்னாபிஷேகமும்…!

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா?

தானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்பர். அன்னமிட்ட கை நன்மை ஆக்கிவிட்ட கை என்று பாடல் வரிகளும் உண்டு. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது அன்னம் தான். இப்படி முக்கியான ஒன்றாக கருதப்படும் அன்னம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அது ஏன் என்று பலருக்கும் தெரியாத நிலையில், அதற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த பௌர்ணமி நாளில் சிவலிங்கம் முழுவதுமாக அன்னத்தால் சூழப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு பருக்கை சாதமும், ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. அதன் பிறகு அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவபெருமானைப் போன்று பிரம்மாவுக்கு 5 தலைகள் இருந்தன. படைக்கும் தொழில் புரியும் நாம் ஏன் சிவபெருமானை வணங்க வேண்டும் என்ற ஆணவத்தில் இருந்தார் பிரம்மன். அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மாவின் ஒரு தலையை சிவபெருமான் கொய்த்துவிட்டார். பிரம்மாவின் ஒரு தலையை கொய்ததன் காரணமாக சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் ஒட்டிக் கொண்டது. எத்தனை முறை அதனை கீழே போட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து சிவபெருமானின் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது.

இது போன்று 99 முறை நடந்த நிலையில், அதனை கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள் என்று பார்வதி தேவி கூறினாள். சிவபெருமானும் அப்படியே செய்ய, பிரம்மாவின் கொய்யப்பட்ட தலையானது சிவபெருமானின் கையில் கபாலமாக மாறியது. அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்தி சிவபெருமான் பிச்சையெடுக்கும் நிலைக்கு உள்ளானார். போடப்படும் உணவையெல்லாம் அந்த கபாலமே சாப்பிட்டதால், உலகிற்கே படியளந்த சிவபெருமானுக்கு உணவு கிடைக்கவில்லை.

பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த அவரது மனைவி சரஸ்வதி, பார்வதி தேவிக்கு கொடிய உருவத்துடன் இந்த பூவுலகில் திரிய சாபமிட்டாள். இதையடுத்து பூவுலகில் பல தலங்களில் அலைந்து திரிந்து மலையனூரில் இருக்கும் ஒரு புற்றினுள் புகுந்து பாம்பு ரூபம் கொண்டு சிவனை நினைத்து தவமிருந்தாள். உணவுக்காக பிச்சையெடுத்து அலைந்து திரிந்த சிவபெருமான் பாம்பு உருவம் கொண்ட பார்வதி தேவியிடம் பிச்சை கேட்டார்.

அப்போது சுவை மிகுந்த உணவை தயார் செய்து தனது கணவர் சிவபெருமானுக்கு பிச்சையிட்டாள். ஓரிரு முறை பார்வதி தேவி பிச்சையிட்ட உணவை கபாலம் உண்டது. மூன்றாவது முறை வேண்டுமென்றே உணவை தவறவிட்டாள் தேவி. உணவின் ருசியறிந்த கபாலம் உணவை உண்ணும் ஆவலில் சிவனின் கையிலிருந்து அகன்றது.

இதையடுத்து, விஸ்வரூபம் எடுத்த பார்வதி தேவி, கபாலம் மீண்டும் வராதவாறு பூமியிலேயே போட்டு அழுத்தினாள். இதன் மூலம் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இதனை மயானக் கொள்ளை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொண்டாடுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது. அதாவது, சிவபெருமான் காசிக்கு சென்று பிச்சைப்பாத்திரம் ஏந்திய போது அவருக்கு அன்னப்பூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பின் காரணமாக கபாலம் நிரம்பியது. இதையடுத்து, கபாலம் கீழே விழ சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாதம் பௌர்ணமி. ஆதலால், தான் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு செய்யப்படும் 11 வகையான அபிஷேகங்களில் அன்னாபிஷேகமும் ஒன்று.

அன்னத்தை யாருக்கும் கொடுக்காமல் தனக்கே உரியது என்று எவர் ஒருவர் வைத்திருக்கிறாரோ அவரால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது. அந்த வேத உண்மையை பறைசாற்றும் வகையில், ஐப்பசி பௌர்ணமி நாளில் ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அன்னமும் ஒவ்வொரு சிவலிங்கத்தை குறிக்கிறது.