சிவராத்திரி எத்தனை வகைப்படும்?

108
சிவராத்திரி எத்தனை வகைப்படும்?

சிவராத்திரி எத்தனை வகைப்படும்?

ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி அம்பாளுக்கு உகந்தது; சிவராத்திரி எம்பெருமானுக்கு உகந்தது; இரண்டுமே இரவில் கொண்டாடப்படும் பண்டிகைகள்.

பொதுவாக சிவனுக்கு உரிய நேரம் காலை. ஆனால் அவர் ஏற்ற பூஜைகள் எல்லாம் அம்பிகைக்கு உரிய நேரமான மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சிவனும் சக்தியும் ஒன்று என்று புலப்படுகிறது.

சிவராத்திரி ஐந்து வகைப்படும்:

நித்திய சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
மாஸ சிவராத்திரி
யோக சிவராத்திரி
மஹா சிவராத்திரி

ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருசத்தில் 24 சிவபூஜை புரிவது நித்திய சிவராத்திரி எனப்படும்.

தை மாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் பத்தி மூன்று நாட்கள் நித்யம் ஒரே வேலை பூஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாசி கிருஷ்ணா சதுர்த்தசி – பங்குனி முதலில் வரும் திருதியை-சித்திரை கிருஷ்ண அஷ்டமி – வைகாசி முதல் அஷ்டமி – ஆனி சுக்ல சதுர்த்தி – ஆடி கிருஷ்ண பஞ்சமி – ஆவணி சுக்ல அஷ்டமி – புரட்டாசி முதல் திரியோதசி – ஐப்பசி – சுக்ல ச்வதசி – கார்த்திகை முதல் சப்தமி அஷ்டமியும் – மார்கழி இரு பட்ச சதுர்த்தசிகள் – தை மாத சுக்ல திருதியை இவை மாத சிவராத்திரி. மாசி கிருஷ்ண சதுர்த்தசி – மஹா சிவராத்திரி.

சிவபெருமான் சிவராத்திரியின் மகிமையை நந்தி தேவருக்கு உபதேசித்து அருளினார். நந்தி தேவர் சிவராத்திரியின் மகாத்மியத்தை எல்லா தேவர்களுக்கும், கணத்தவர்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்து அருளினார்.

இத்தகைய சிவராத்திரி விரதத்தை பிரம்மதேவர், திருமால், பார்வதி ஆதிஷேசன், சரஸ்வதி அனுஷ்டித்துள்ளனர். ஒரு சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பது நூறு ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலனைக் கொடுக்கிறது என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போருக்கு காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும்.

சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர் சிவராத்திரி அன்று வைகறைத் துயிலெழுந்து, குளித்து மடியுடுத்தி திருநீறு அணிந்து, ருத்திராட்ச மாலைகள் தரித்து, சிவ பூஜை செய்து நம சிவாய நாம சிந்தையோடு ஆலயம் செல்ல வேண்டும். அம்பலத்தை 108 முறை வலம் வர வேண்டும். எம்பெருமானுக்கு நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜைகளைக் கண்டுகளிக்க வேண்டும் .சிவ பூஜைக்காக வில்வதளம், அபிஷேகத்திற்காக நெய், சந்தனம், தயிர், பால் தேன் மற்றும் பூஜைக்காக கரும்பு, இளநீர், சந்தனம் முதலியவைகளை ஷேத்திரங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அன்றைய தினம் முழு உபவாசம் இருக்க வேண்டும். அதற்கு இயலாதவர்கள் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒரு வேளை உட்கொள்ளலாம் அல்லது வள்ளிக்கிழங்கை உப்பில்லாமல் சர்க்கரையில் வேக வைத்து உண்ணலாம்.

நான்காவது கட்ட பூஜை முடியும் போது மறுநாள் பொழு புலர்ந்துவிடும். உடனே சென்று தரிசனம் செய்து சூரியன் உதித்து ஆறு நாழிகைக்கு பாரணை செய்ய வேண்டும். இத்தகைய சிவராத்திரி விரதத்தை செய்வோருக்கு சகல சித்திகளும் கிட்டும். சகல சௌபாகியங்களும் பொங்கும்.

சிவராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதே போல் சிவராத்திரியைப் போற்றும் பல திருத்தலங்களும் உள்ளன. பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பிக்கப்படுகிறது.

கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமா தேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன.

மாசியில் பிரம்ம தேவரும், பங்குனியில் மகா விஷ்ணுவும், சித்திரையில் உமா தேவியும், வைகாசியில் சூரியனும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசியில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன்மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.

சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை “சுக்ர சிவராத்திரி’ என்று சொல்வார்கள். அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்து கொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.