சிவாலங்களில் நந்தி தரிசனம்!

52

சிவாலங்களில் நந்தி தரிசனம்!

பொதுவாக சிவலாயத்தில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். ஓர் ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோயில்களில் கொடி மரத்திலிருந்து மூலவரை தரிசிக்கும் வழியில் “இந்திர நந்தி, ஆத்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி’ என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம்.

  1. தரும நந்தி (சிவனின் தர்ம அவதாரம்)
  2. அவதார நந்தி என்னும் திருமால் நந்தி(திரிபுரம் சிவன் எரித்த போது உருவானவர்)
  3. வேதநந்தி என்னும் பிரம நந்தி(ஆகம விதிகளை வேதங்கள் அடிப்படையில் உரைக்க நந்தி அவதாரம் எடுத்த பிரம்மன்)
  4. இந்திர நந்தி – போகங்களுக்கு காரணமான இவர் ஈசனை தாங்கி நின்றவர்
  5. ஆத்ம நந்தி

மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும். இந்த நந் தியை ‘சிலாதி நந்தி’ என்றும் சொல்வர்.கயிலையைக் காப்பவர்,

நந்தி பகவான்:

நந்தி சைவ மதத்தின் முதல் குரு. நந்தி எனும் சொல்லுக்கு எப்போதும் ஆனந்த (மகிழ்ச்சி) நிலையில் இருப்பவர் என்று பொருள். நந்தியின் உருவம் சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கம் ஆகிய நான்கு ஆத்ம குணங்கள் உணர்த்துகிறது. இந்த நான்கு ஆத்ம குணங்களும் ஒரு பக்தனிடம் இருந்தால்தான், அவனுக்கு ஈசனை சச்சிதானந்த அறிகுறி வடிவமாக உணர முடியும்.

இதன் படி நந்திபெருமான், சிவபெருமானின் அம்சமாக, அவர் சாரூபம் பெற்றவராக இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவரது அவதாரம் ஸ்ரீசைல மலையில் நிகழ்ந்தது. நூறாண்டுகளுக்கு மேல் சிவனை நோக்கி தவம் இருந்து 16 வரங்களை பெற்றார். அதாவது உன் பாதகமலத்தில் என்றென்றும் இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார்.

நந்தியின் நல்ல உள்ளத்தை கண்ட ஈசன், அவருக்கு சிவாலயத்தில் எல்லா அதிகாரத்தையும் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த உயர்ந்த அதிகாரத்தை பெற்றது மட்டுமின்றி இறைவனிடம் இருந்து சிவாகமங்கள் அனைத்தையும் கற்றார். பிறகு அந்த சிவகாமங்களை நந்தி நமக்கு அருளினார் என்று சொல்லபடுகின்றது …

இந்த அடிப்படையில் பார்த்தால், அவர் குருவாக மட்டுமின்றி ஆலயத்துக்கு காவல்காரர் போல கம்பீரமாக இருப்பது புரியும். இன்னொரு வகையில் பார்த்தால் ஈசன் போலவே இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. மான், மழு எல்லாம் உடையவர். இவர் கைகளில் பொன் பிரம்பை ஏந்தி காவல் செய்கிறார். இதனால் நாம் குரு மரபுக்கெல்லாம் முதல் குரு நாதன் என்று நந்தியெம்பெருமானை திருமூலர் புகழ்ந்து பாடியுள்ளார்.

இப்படி சர்வ வல்லமை படைத்த நந்தியை நாம் மனம் உருகி வழிபட வேண்டும். “சிவத்தியானம் செய்யும் மகாவித்துவானாகிய நந்தியே… மகாதேவனை தரிசனம் செய்ய எனக்கு அனுமதி கொடு” என்று மார்புக்கு நேராக கரம் குவித்து வழிபடுதல் வேண்டும். இல்லையெனில், “நந்தியெம் பெருமானே… பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழு முதல் பொருளமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன்.

ஈசனின் திருவருள் கிடைக்க எனக்கு உதவி செய்யுங்கள் அய்யனே” என்று கூறி வழிபடலாம். மொத்தத்தில் சிவபெருமானை வழிபட நந்திகேசுவரரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். நந்திகேசுவரர் ஆசீர்வாதத் துடன்தான் நாம் கருவறை பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும்

  1. தரும நந்தி:

மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே தரும நந்தி என்பதாகும். உலகம் சிவபெருமானிடத்தே ஒடுங்குகின்ற சங்கார காலத்தே உலகம் யாவும் அழியும். பிரளயவெள்ளம் பொங்கிப் பெருகி வானளவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும் அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும்.

இவ்வாறு தன்னைத் தாங்கும் ரிஷபத்தை பெருமான் ஆரத்தழுவிக் கொண்டான். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவனுடனேயே இருக்கும். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்ற பெயரும் வந்து.

  1. மால் விடை (விஷ்ணு நந்தி):

ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினார். அதை உணர்ந்த சிவபெருமான் அந்தத் தேர்தட்டின் மீது தன் வலது காலை ஊன்றி ஏறினார்.

அவ்வாறு அவர் ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது. தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால் அழுத்தத்தைக் கூடத் தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு அஞ்சி பெருமானைத் தொழுதனர்.

அப்பொழுது திருமால் இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தார். இந்நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு அவர் சன்னிதியில் நிலையாக எழுந்தருளினார். இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

  1. வேத நந்தி:

ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். பிரம்மனின் நந்தி அவதாரமான இவர் நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் . சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. பின் அவரே ஆலய மற்றும் வழிபாட்டு ஆகம விதிகளை சனாதன முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் உரைத்தவர். வேதனான பிரம்மன், நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை “வேத நந்தி”, “வேத வெள்விடை”, “பிரம்ம நந்தி” என்று பல பெயர்களால் அழைக்கின்றனர்.

பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும் கம்பீரமாகவும் அமைப்பர்.

இந்த நந்தியை சுதையினாலும் சுண்ணாம்புச் சாந்தினானும் மிகப்பெரிய அளவில் அமைக்கின்றனர். திருவிடைமருதூர் , ராமேஸ்வரம்  சுவாமி சந்நிதி முன் உள்ள

சுதை வேலைப்பாட்டால்ஆன இந்த நந்தி அதிகார நந்தியின் பின்னே காணப்படும். 22 அடிநீளமும், 12 அடி அகலமும்,17 அடி உயரமும் உள்ளது. [காஞ்சிபுரம் முதலான தலங்களில் இத்தகைய பிரம்மாண்டமான வேத வெள்விடையை பெரிய மண்டபத்துள் காணலாம். ஐந்துக்கும் மேற்பட்ட நந்தி உள்ள ஆலயங்களில் இவரைக் காணலாம்.

  1. இந்திர நந்தி:

ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய இந்திரன் வடிவாக விளங்கும் இந்த நந்தியைப் போகநந்தி என்றும் இந்திர நந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.

இந்த நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர். அதே போல சிவாலயங்களில் இவர் அனுமதி பெற்றே உள்ளே  நுழைய வேண்டும். ஐந்துக்கும் மேற்பட்ட நந்தி உள்ள ஆலயங்களில் இவரைக் காணலாம்.

  1. ஆன்ம நந்தி:

கோயில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும். இந்த நந்தியை ‘சிலாதி நந்தி’ என்றும் சொல்வர். கயிலையைக் காப்பவர்.

ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி “ஆன்ம நந்தி” எனப்படும். இது உலக உயிர்களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து அவனுடைய நினைவில் நிலை பெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது. சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும்.

ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.