சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை!

62

சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை!

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இதனை அறுவடை பண்டிகை என்றும் கூறுவார்கள். தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இயற்கைத் தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றிக் கடனாக இந்த பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தரும் மாதம் தான் தை மாதம். நீர் வளம் மிக்க இடங்களில் 3 விளைச்சல் அதான் 3 வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழைநீர் தேக்கத்தால் ஒரேயொரு வேளாண்மை தான் விளைவிக்க முடியும். ஆகவே மார்கழி அல்லது தை மாத அறுவடை தான் நடக்கும்.

இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியை (பச்சரிசி) கொண்டு பால், சர்க்கரை அல்லது வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது பானை அல்லது புது அடுப்பில் கொதிக்க விட்டு பொங்கும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரிய பகவானுக்கும், மாட்டுக்கும் படைத்து நாமும் பகிர்ந்து உண்ணுவதே பொங்கல் விழாவின் தனிச் சிறப்பு ஆகும்.

பொங்கு என்பது கொதித்தல், செழித்தல், சமைத்தல், மிகுதல் என்று பொருள்படும். பொங்கல் படையலில் முக்கியமாக மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக் காய்கறி வகைகள் சேர்க்கப்படும். பச்சை நெற்களை அரைத்து தவிடு நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன் படையலிடுவதும் வழக்கத்தில் உள்ளது. மேலும், பொங்கலன்று தமிழர்கள் அனைவரும் சைவ வகை உணவுகளையே உண்கின்றனர்.

தைப்பொங்கல் விழாவானது தமிழர்களின் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை இந்துக்கள் மட்டுமல்லாமல் தமிழ் கிறித்துவர்கள், தமிழ் இஸ்லாமியர்களும் சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையை உணர்த்துகிறது.

தமிழர்களால் தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு விழா தான் தை பொங்கல். இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு ஆகிய நாடுகளிலும் பொங்கல் பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களின் தேவனாகிய சூரியனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக சூரியப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உழவர் திருநாள்: உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் உழைப்பிற்கு உதவிகரமாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே தைப்பொங்கல் விழா உழவர் திருநாளாக கருதப்படுகிறது. தை பொங்கல் நான்கு நாள் விழாவாக உலகிலுள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது:

போகி பண்டிகை: போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். போகிப்பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல் அல்லது பூலாப்பூ செருகி வைப்பர்.

பழங்காலத்தில் ஒரு சில கிராமங்களில் போகி பண்டியன்று ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது, ஏன் அழுகிறார்கள் என்பதை அறிஞர்கள் கண்டறிந்து அந்த நாளை புத்தர் இறந்த நாளாகவே கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்: தைப் பொங்கல் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மாட்டுப் பொங்கல்: உழவுத் தொழிலுக்கு உறுதுணையாஅ விளங்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகை தான் மாட்டுப் பொங்கல். மாட்டுப்  பொங்கல் தை மாதம் 2-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டு பொங்கலாகும். மாடுகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரது வீடுகளிலும் இந்த பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்: காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் (முக்கியமாக தமிழ்நாட்டில்) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச் சென்று தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வர். இதனை அன்பை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே பழங்காலத்தில் மக்கள் கருதினர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் காணும் பொங்கல் என்பது வெளியில் சென்று சுற்றிப் பார்ப்பது என்று புரிந்து கொண்டுள்ளனர்.