செய்யும் தொழிலில் வெற்றி பெற வழிபட வேண்டிய கோயில்!

133

செய்யும் தொழிலில் வெற்றி பெற வழிபட வேண்டிய கோயில்!

கன்னியாகுமரி மாவட்டம் திப்பிரமலை என்ற ஊரில் உள்ள கோயில் பாலகிருஷ்ணன் திருக்கோயில். இந்தக் கோயிலில் பாலகிருஷ்ணன் மூலவராக காட்சி தருகிறார். புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அமாவாசை ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணன் தன் தாயார் யசோதையுடன் 12 அடி உயரத்தில் அமைந்திருப்பது இந்தக் கோயிலில் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

சேர நாட்டுக் கட்டடக் கலையில் திப்பிரமலை கிருஷ்ணன் கோயில் கட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவத்தில் கோயிலும், ஓடு வேய்ந்த விமானமும் கொண்டுள்ளது. கூம்பு வடிவத்தில் விமானம் காட்சியளிக்கிறது. கோயிலின் முன்பு பலிபீடம் உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நினைத்த காரியம் நிறைவேறவும், செய்யும் தொழிலில் வெற்றி பெறவும் இங்குள்ள கிருஷ்ணரை வழிபாடு செய்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்தும், புதிய வஸ்திரம் சாற்றியும் வெண்ணெய் சாற்றியும், முறுக்கு, சீடை ஆகியவற்றை நைவேத்தியத்தியமாக படைத்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோயிலில் 12 அடி உயரத்தில் கிருஷ்ணர் அமைந்திருக்க அவரது வலப்பக்கத்தில் தாய் யசோதா மகனின் காலடியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். அன்னையின் வலது கையில் வெண்ணெயும் இடது, கையில் கரண்டியும் உள்ளது.

இவ்வாறு கிருஷ்ணன் தனது தாயாரோடு கோயில் கொண்டுள்ள அபூர்வ தலமாக திப்பிரமலை கருதப்படுகிறது. கோயில் கருவறையில் 12 அடி உயரத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு கையில் சங்கு சக்கரமும், கீழ் நோக்கிய கைகளில் வலது கையில் வெண்ணெயும், இடது கையில் கதையும் ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்தக் கோயிலில் குடி கொண்டுள்ள பாலகிருஷ்ணனின் திருவுருவம் தான் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிலை என்று கூறப்படுகிறது. கிருஷ்ணனின் லீலைகள் பற்றி பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தான் கிருஷ்ணன் சிறு வயதில் வெண்ணெய் திருடி உண்டதாகும். வெண்ணெய் திருடி உண்டதை அறிந்த தாயார் யசோதா கண்ணனை கண்டிக்கவும், தண்டிக்கவும் செய்தாள். அப்போது குழந்தைக் கண்ணன், குழந்தையாகவே கையில் வெண்ணெயுடன் விஸ்வரூபம் எனப்படும் பேருருவம் எடுத்து தாய் யசோதாவுக்கு காட்சி தருகிறார்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது. அப்போது இரணியல் என்ற ஊரைச் சேர்ந்த வைணவ பக்தர் ஒருவர் இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் கிருஷ்ணன் பிறந்தநாளானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையிலும், அமாவாசை நாட்களிலும் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கும் போது நாராயணா என்றோ கிருஷ்ணா என்றோ ஒருமுறை மனதார பெருமாளை சரணடைய அத்தனை பாவங்களும் விலகி ஆனந்தமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.