செருப்பு காணிக்கையை ஏற்றுக் கொள்ளும் அய்யனார்!

157

செருப்பு காணிக்கையை ஏற்றுக் கொள்ளும் அய்யனார்!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள காரையார் என்ற ஊரில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். இந்தக் கோயிலில் சொரிமுத்து அய்யனார் (மகாலிங்கம்) மூலவராக காட்சி தருகிறார். முருகப் பெருமானுக்கு எப்படி ஆறுபடை வீடு இருக்கிறதோ அதே போன்று ஐயப்பனுக்கும், சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை பந்தளம், சபரிமலை என்று ஆறுபடை உள்ளது. மேலும், சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வது உண்டு.

ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சொரிமுத்து அய்யனார் கோயில் (சாஸ்தா கோயில்) கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை குத்துக்காலிட்டு, இடது புறம் திரும்பி காட்சி தருகிறார். குல தெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

இந்தக் கோயிலில் மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், அகத்தியர், சுடலைமாடன் சாமி, தூசிமாடன், பட்டவராயர், கரடிமாடசாமி, மொட்டையர் பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளன. இலுப்பை மரத்தில் கட்டும் மணிகளை மரம் விழுங்கிவிடுவதைப் போன்று உள்ளேயே பதிந்து விடுகின்றன. இதனால், இந்த மரத்தை மணி விழுங்கி மரம் என்று அழைக்கின்றனர்.

இங்குள்ள அய்யனாருக்கு செருப்பு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையின் போது பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்தக் கோயிலில் சாஸ்தா, சொரிமுத்து அய்யனார் என்ற பெயரில் பூர்ண புஷ்கலா தேவியருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலையிடும் பக்தர்கள், ஐயப்பனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடான இந்தக் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து கொள்கின்றனர்.

பந்தள மன்னர் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்து வந்தார். தனது இளம் வயதில் இந்தப் பகுதிக்கு வந்து வீர விளையாட்டு கற்றுக் கொள்ள வந்தார். இதன் காரணமாக இங்கு முதன் முதலாக கோயில் எழுந்ததாக கூறப்படுகிறது. அதோடு, ஐயப்பனின் ஆறுபடை வீடுகளான அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம் ஆகிய பகுதிகளில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இறுதியாக, தவம் இருப்பதற்காக சபரிமலை சென்ற போது தான் சபரிமலையில் ஐயப்பன் கோயில் தோன்றியதாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

இந்தப் பகுதியில் பிராமண குலத்தில் பிறந்த முத்துப்பட்டன் என்ற பிராமணர், சூழ்நிலை காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்து இரு பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு ஜாதியில்லை என்பதை முதன் முதலாக இவர் தான் நிரூபித்தார். மேலும், பசுக்களை பாதுகாக்கும் போரில் பங்கேற்று மரணமடைந்தார். இதன் காரணமாக இவரை பட்டவராயர் என்று அழைத்து இந்தக் கோயிலில் அவருக்கு என்று ஒரு சன்னதியும் எழுப்பினர். இந்த சன்னதியில் பொம்மக்கா, திம்மக்கா என்ற தனது இரு காதல் மனைவிகளுடன் இந்த சன்னதியில் பட்டவராயர் அருள் பாலிக்கிறார்.

என்னதான் பிராமணர் குலத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட பட்டவராயர் தனது மாமனார் உத்தரவுப்படி, செருப்பு தைக்கும் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக பட்டவராயர் சன்னதியில் பக்தர்கள் செருப்பை காணிக்கையாக செலுத்துகின்றனர். முதல் ஆண்டு காணிக்கையாக செலுத்தப்படும் செருப்பானது, அடுத்த ஆண்டில் சென்று பார்த்தால், அந்த செருப்பு தேய்ந்து இருக்கும். இதன் மூலமாக பட்டவராயரே அந்த செருப்பை அணிந்து கொள்கிறார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க காட்டுப்பகுதி என்பதால், பெருமளவில் யாரும் இந்தப் பகுதி வழியாக வருவதும் இல்லை, போவதும் இல்லை. அப்படி இந்த பகுதி வழியாக செல்பவர்கள் இந்த செருப்புகளை எல்லாம் தொடுவதில்லை. பட்டவராயரிடம் வேண்டிக் கொண்டால் கால்நடைகள் நோய்கள் இன்றி இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயில் வளாகத்தில் உள்ள இலுப்பை மரத்தில் பக்தர்கள் மணி கட்டுகின்றனர். பக்தர்கள் கட்டும் மணிகளை மரம் விழுங்கி விடுவதைப் போன்று உள்ளேயே பதிந்து விடுகின்றன. இதனால், இந்த மரத்தை மணி விழுங்கி மரம் என்று அழைக்கின்றனர். இந்த இலுப்பை மரத்திற்கு கீழ், சங்கிலி பூதத்தார், பாதாள கண்டிகை, கும்பாமணி, மொட்டையர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளன. இந்த காவல் தெய்வங்களுக்கு அருகாமையில் ஒரு விநாயகர், இரு யானைகளுடன் இருக்கிறார்.

சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது தென் பகுதி மேலோக்கி காணப்பட்டது. இதனை சரிசெய்ய சிவபெருமான், அகத்தியரை அனுப்பி வைத்தார். அகத்திய முனிவர் பொதிகை மலையில் தங்கியிருந்து லிங்க பூஜை செய்தார். நாளடைவில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டது. ஒரு காலத்தில் இந்த வழியாக சென்ற மாடுகள் ஒரு இடத்தில் நின்று தானாக பால் சுரந்தன. இதையறிந்த அந்தப் பகுதி மன்னர், அந்த இடத்தை தோண்டிப் பார்த்தார். அதில், சிவலிங்கம் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. மேலும், அந்த லிங்கத்தை வைத்து கோயில் எழுப்பப்ட்டது.

இந்த தலத்திலேயே சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சாஸ்தாவை அய்யனார் என்பர். அய்யன் என்பது தலைவன் என்ற அர்த்தமாகும். பக்தர்களுக்கு அருளை சொரிபவர் என்பதால், இவர் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.