செவ்வாய் தோஷம் நீங்க முருகனுக்கு பால் அபிஷேக வழிபாடு!

66

செவ்வாய் தோஷம் நீங்க முருகனுக்கு பால் அபிஷேக வழிபாடு!

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் என்ற பகுதியில் உள்ள கோயில் கண்ணீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் கண்ணீஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையில் நடராஜருக்கு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தில் சுவாமி அம்பாள் தபசு காட்சி ஆகிய நாட்கள் சிறப்பாக திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்தக் கோயிலில் பூர்ணகலா, புஷ்கலாவுடன் அய்யனார் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்தக் கோயிலில் வைத்து இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். ஆஞ்சநேயரும் புடைப்பு சிற்பமாக தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வியாபாரம் செழிக்கவும், குடும்ப பிரச்சனை தீரவும் இவருக்கு சனிக்கிழமைகளில் பூஜை செய்கின்றனர். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை ஏற்பட்டால் இங்குள்ள முருகனுக்கும், துர்க்கைக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

வீரபாகு பாண்டியனுக்கும், விக்கிரம சோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. பாண்டியன் மீது விக்கிரம சோழன் பல முறை போர் தொடுத்தும் அவனை வெல்ல முடியவில்லை. ஆகையால் பாண்டியனை கொலை செய்ய பல முறை சதி செய்தான். தொடர்ந்து சதி செய்த காரணத்தால் ஏற்பட்ட பாவத்தால் விக்கிரம சோழன் தனது பார்வையை இழந்தான்.

தவறை உணர்ந்த விக்கிரம சோழன் தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவதானம் என்ற ஊரிலுள்ள சிவனை வழிபட்டான். அங்கு அவனுக்கு ஒரு கண் பார்வை கிடைத்தது. மற்றொரு கண்ணுக்கும் பார்வை கிடைக்க வேண்டும் என்று சோழன் வேண்டினான். அவனது கனவில் தோன்றிய சிவபெருமான், தனக்கு ஒரு கோயில் கட்டினால், மற்றொரு கண்ணின் பார்வை கிடைக்கும் என்று கூறினார். அதன்படி, சேத்தூரில் அவன் கோயில் கட்டி பார்வை பெற்றான். கண் தந்த சிவபெருமானுக்கு திருக்கண்ணீஸ்வரர் என்று பெயரிட்டான்.

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.