செவ்வாய் பிரதோஷ வழிபாட்டிற்கு இத்தனை சிறப்புகள் உண்டா?

72

செவ்வாய் பிரதோஷ வழிபாட்டிற்கு இத்தனை சிறப்புகள் உண்டா?

சிவபெருமானை வழிபட உகந்த காலம் பிரதோஷ காலம். இந்த பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு என்றும், இந்த தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் என்றும்  அழைக்கப்படும்.

அசுர்ர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காத்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷமானது சிவபெருமானின் வயிற்றை அடையாமலிருக்க பார்வதி தேவியானவள் சிவனின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கவே ஆலகால விஷமானது சிவனின் கழுத்தை நீலநிறமாக மாற்றியது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரையோதசி தினத்தில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும், பின் மூன்றே முக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நினைத்து அனுஷ்டிக்கும் விரதம். இந்த முன், பின் மூன்றே முக்கால் நாழிகையும் மொத்தமாக ஏழரை நாழிகை காலம் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையுள்ள காலம். ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை பிரதோஷம்.

செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.

செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். மேலும் பித்ரு தோஷமும் விலகும்.. இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த ராசி நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும், ரணமும் நீங்கும் என்பது எதார்தமான உண்மையாகும்.