சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்!

94

சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்!

காலத்தின் நாயகனும், சூரியனைத் தனக்குள் கொண்டவருமான, சர்வேஸ்வரனின் திருவடிவமான சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருதுநகர்:

ரெயில்வே காலனி கடைசியில், கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் சொர்ண பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தபசுமலை:

புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் சொர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து சொர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.

சிதம்பரம்:

தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய சொர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே காட்சி தருகிறார்.

படப்பை:

தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் படப்பை என்ற ஊரில் இத்தலம் உள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் சொர்ண ஆகர்ஷண (சொர்ணாகர்ஷண) பைரவர் மூர்த்திகளை சிறப்புடன் அமைத்துள்ளார்.

ஆடுதுறை:

ஆபத்சகாயேச்வர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது சொர்ண பைரவரும் இருக்கிறார்.

காரைக்குடி:

இங்கு ரெயில் நிலையத்திற்கு 2 கி.மீ.தூரத்தில் உள்ளது, இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் சொர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன் முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடா வருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் ஷேத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

பஞ்சமுக பைரவர்:

முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள் பாலிக்கிறார்.