ஜாதக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

92

ஜாதக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை என்ற பகுதியில் உள்ள கோயில் கால பைரவர் கோயில். பெங்களூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிரபலமான கோயில். இந்தியாவில் இருக்கும் இரண்டு கால பைரவர் கோயில்களில் மிகவும் பிரபலமான கோயிலாக தர்மபுரி கால பைரவர் கோயில் திகழ்கிறது. இந்தியாவில் காசியில் தட்சிண காசி கர்நாடகா குறிப்பாக பெங்களூரு மற்றும் ஆந்திரா மக்களிடையே மிகவும் பிரபலமான கோயில்.

இந்தியாவில் காசியில் தட்சிண காசி (தென்காசி கால பைரவர்) மற்றும் தர்மபுரி அதியமான் கோட்டையில் கால பைரவர் கோயில் உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தமுள்ள 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். இந்தக் கோயிலில் உன்மந்திர பைரவர் வீற்றியிருக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் தகடூரை மையமாகக் கொண்டு வாழ்ந்த சிற்றரசர்களில் அதியமான் என்ற மன்னனும் ஒருவர். இவருக்கு, எப்போது எதிரி நாட்டு மன்னர்கள் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருந்தது. காலப்போக்கில் அச்சம் அவருக்கு மன நிம்மதியை கெடுத்தது.

இதையடுத்து, தனக்கு நிம்மதி கிடைக்கவும், பகைவர்களால் ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்வது என்று ராஜகுருவிடம் கேட்டார். அதற்கு, ராஜகுருவோ பகை மன்னர்களிடமிருந்து பாதுகாக்க படை பலத்தையும் மீறிய தெய்வ சக்தி துணையிருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான கால பைரவர் தான் என்றும் கூறினார். ஆனால், கால பைரவருக்கு என்று தனிக்கோயில் கட்டக் கூடாது என்றும் கூறினார்.

ராஜகுரு கூறியதைக் கேட்ட அதியமான் மன்னன் சிவன் கோயில்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவரே தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று தெளிவு பெற்றார். இதையடுத்து, கால பைரவருக்கு ஒரு கோயில் கட்டவும் விரும்பினார்.

கால பைரவர் பற்றி அறிந்து கொண்ட மன்னன், தனது அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி வைத்து கால பைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். கால பைரவரின் விக்கிரகம் வருவதற்கு முன்னதாகவே கோயில் கட்டும் திருப்பணிகளையும் தொடங்கினார். கோயில் வேலை முடிக்கவும், கால பைரவர் விக்கிரகம் வந்து சேரவும் சரியாக இருந்தது.

தான் கட்டிய கோயிலில் கால பைரவரை பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் விதானத்தில் நவக்கிரகங்களின் திருவடிகளையும் வடித்தார். நவக்கிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக் கூடாது என்பதற்காகவும் அதியமான் மன்னர் நவக்கிரகங்களை வழிபட்டார்.

அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும். அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விளங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். தன் நாட்டையும், நாட்டு மக்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்த கால பைரவர் என்பதால், தன திருக்கரத்தில் திரி சூலத்துடன் வாளும் கொண்டு காட்சி தருகிறார்.

தனது நாட்டை பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவரது கையில் திரி சூலத்துடன் போர் ஆயுதமான வாளும் வைத்துள்ள பைரவரை வணங்கி வருகின்றனர். காசிக்கு அடுத்து தனி சன்னதியில் இருக்கும் கால பைரவர் தட்சிணகாசி கால பைரவர் என்று பிரசித்தி பெற்று திகழ்கிறார்.

அதியமான் மன்னரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கட்டப்பட்ட பின்னர் தான் மன்னர் போரில் வெற்றி பெற்றார். இந்தக் கோயிலில் உன்மந்திர பைரவர் உள்ளார். இவரது விசேஷம் என்னவென்றால், 27 நட்சத்திரமும், 12 ராசியும் இவரது திருமேனியில் அடக்கம்.

மேஷ ராசிக்காரர்கள் இவரது சிரசினை பார்த்து வழிபட்டால் தோஷம் நீங்கும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மற்றும் மகரம் முட்டியின் கீழ் பகுதி, கும்பம் கனுக்கால் பகுதி, மீனம் பாதம் ஆகிய பகுதிகளைப் பார்த்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்தக் கோயில் அதியமான் மன்னர் போருக்கு செல்வதற்கு முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பிறகு தான் போருக்கு செல்வாராம். போரில் வெற்றி பெற்ற பிறகு வந்து கோயிலில் வழிபாடு செய்வாராம். இதன் அடையாளமாக இந்தக் கோயிலில் மட்டும் வாள் வைக்கப்பட்டுள்ளது.

நினைத்த காரியம் நிறைவேற இந்தக் கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. அதுவும், சாம்ப பூசனை விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றி கோயிலை 18 முறை அல்லது 8 முறை சுற்றி வர வேண்டும். இந்த வழிபாடுகளை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்து தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள், 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும் என்பது ஐதீகம்.

காலபைரவரின் பிறந்தநாள் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி காலாஷ்டமி என்பதால், இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் உள்ள கால பைரவரை வழிபாடு செய்தால், கெட்ட நேரம் நல்ல நேரமாகும். நல்ல நேரம், கெட்ட நேரம் அதிபதியாக பார்க்கும் இடம் இந்தக் கோயிலில் உள்ளது.

இவரது தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிவப்பு வர்ணம் மேனி கொண்டவர்.

நான்கு கைகளை கொண்டவர். திரிசூலம், கபாலம், பாச குஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும்.

இவரை வழிபட கால நேரம் என்று எதுவும் கிடையாது. கோயிலில் 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர் தான்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர்.

பாம்பினை பூணூலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள்ளார்.

இவரது வாகனம் அசுரசுன வாகனம் (நாய் வாகனம்), மற்ற கோயில்களில் சுன வாகனம் மட்டும் இருக்கும்.

நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.

வியாதிகளை குணப்படுத்துபவர்.

இந்தக் கோயிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டுமே இருக்கும். மற்ற கோயில்களில் நாய் வாகனம் மட்டுமே இருக்கும்.

குறிப்பு: பதிவுக்கு ஏற்ற புகைப்படம் இல்லை..