தாயின் சொல்லைக் கேட்டு துன்பங்களை போக்கும் சனி பகவான்!

29

தாயின் சொல்லைக் கேட்டு துன்பங்களை போக்கும் சனி பகவான்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் தான் வழிவிடும் முருகன் கோயில். இந்தக் கோயிலில் முருகன் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது.

சிறப்பம்சம்:

இந்தக் கோயிலில் முருகப் பெருமானும், விநாயகப் பெருமானும் சேர்ந்தே பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்த தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலில் தான் சனி பகவானின் தாய் சாயாதேவி மரம் வடிவில் அருள் பாலிக்கின்றாள். இந்த மரத்திற்கு சாயாமரம் என்ற பெயர் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு அருகாமையில் சுவாமிநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.

பிரார்த்தனை:

சொத்து பிரச்சனை காரணமாக சண்டையிட்டு நீதிமன்றம் வரை சென்ற சகோதரர்கள், இங்கு வந்து வழிபட்டால் இருவருக்குமிடையில் சமாதானம் ஏற்படும். மேலும், இருவரது வாழ்விலும் வழி பிறக்கும். சுவாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி மூலவரை வழிபடலாம்.

தல பெருமை:

பொதுவாக எந்தவொரு கோயிலை எடுத்துக் கொண்டாலும் கோயிலுக்குள் நுழைந்தவுடன் இட து புறம் விநாயகர் இருப்பார். வலது புறம் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடனோ அல்லது தனியாகவோ நின்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆனால், இந்தக் கோயிலில் சிறப்பு அம்சமாக கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

துன்பங்களை போக்கும் சனி பகவான்:

கோயிலின் உள்ளே சாயா என்ற மரம் உள்ளது. சனி பகவானின் தாய் சாயாதேவி. இவள் தான் மரம் வடிவில் அருள் பாலிக்கின்றாள். இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டுவோருக்கு தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சனி பகவான் பக்தர்களின் துன்பங்களை குறைப்பதாக ஐதீகம்

தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கியவர்கள், வாழ வழியின்றி தவிப்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் என்று அனைவரும் இந்த முருகனை வழிபட்டு வாழ்வதற்கு வழிபெற்றுள்ளனர். ஆதலால், வழிவிடும் முருகன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வழிவிடும் முருகனை வந்து வணங்கிவிட்டு செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டியாகவும், வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை.