தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன்!
பாம்பே தலையணை, வேப்பிலைதான் பஞ்சு மெத்தை என்பதை விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோலத்தை அப்படியே காண வேண்டும் என்றால், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு தான் வர வேண்டும். ஆமாம், புற்றில் கருநாகமாக அன்னை கருமாரியம்மன் குடி கொண்டு இருந்த்தும் வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்கு தான்.
அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கு காட்சி தருவது அற்புதமான காட்சி. வாருங்கள் வேற்காட்டு மாரியை விழி விரிய தரிசிப்போம்.
மாரி என்றால் மழை. கருமாரி என்றார்ல் கரிய நிறம் கொண்ட மேகத்தைப் போன்று அருளை வாரி வழங்கும் அம்மன்.
க – கலைமகள்
ரு – ருத்ரி
மா – திருமகள்
ரி – ரீங்காரி
நாத வடிவானவள் என்று இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது. சென்னையிலிருந்து 20 கிமீ தொலைவில் கருமாரியம்மன் கோயில் உள்ளது. வேலமரக்காட்டில் கருமாரியம்மன் காட்சி தந்ததால் வேற்காடு என்று பெயர் பெற்றது.
கோயிலில் சுயம்புவாக சாந்த சொரூபினியாக அன்னை காட்சி தருகிறாள். இவளுக்குப் பின் இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள்.
பிரகாரத்தில் இருக்கும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் அழகுடன் காட்சி தருகிறாள். மேலும், இங்குள்ள மரச்சிலை அம்மன் சிறப்பானவள். இவளுக்கு ரூபாய் நோட்டு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இவளை வேண்டினால் செல்வவளம் பெருகும்.
கோயில் பிரகாரத்தில் அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் வழிபட திருமண பாக்கியம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். வேப்பிலை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றி தோஷங்கள் விலகுகின்றன.
திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை என இந்தக் கோயிலில்தான் எத்தனை எத்தனை வேண்டுதல் முறைகள்!
ஒரு முறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால் கோபம் கொண்ட அன்னையானவள் அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்கு இணங்க சூரிய பகவானின் பூஜையைப் பெறுகிறாள் என்று வரலாறு கூறுகிறது. புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.
புற்றிலிருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள். ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாட்கள் தான். இந்தக் கோயிலில் இருக்கும் பதி விளக்கு அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
தன்னை வேண்டி வரும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய வரம் அளித்து அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகள் தான் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையில் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.