திங்கள் பௌர்ணமி: சங்கடங்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு!

146

திங்கள் பௌர்ணமி: சங்கடங்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்ம பலத்தை தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவை நிகழ்ந்ததாக சொல்வர்.

ஞாயிறு பௌர்ணமி:

ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் அது சூரியனுக்கு உகந்ததாகும். சூரிய தோஷம் உள்ளவர்களும், சூரியனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

மேலும், உத்திராடம், உத்திரம், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் ஆகியோரும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். அது என்னவென்றால், துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் தீராத நோய்கள் தீரும், வாழ்வில் யோகம் உண்டாகும். அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். ஒருவேளை ராசி, நட்சத்திரம் தெரியாதவர்களும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் கூட இந்த பரிகாரத்தை செய்து வர பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள் – பௌர்ணமி:

திங்கள் கிழமையில் பௌர்ணமி வந்தால் சந்திர திசை நடப்பவர்கள், கடக ராசிக்காரர்கள், ரோகிணி, அஸ்தம் நட்சத்திக்காரர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிறம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் சங்கடங்கள் தீரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வந்து தடை ஏற்பட்டுக் கொண்டிருந்தால் தடை நீங்கும்.

மேலும், வாழ்க்கையில் செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம். ஒருவேளை ராசி நட்சத்திரம் தெரியாதவர்களும் 2, 11, 20, 19 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.