திங்கள், வெள்ளி மட்டுமே திறந்திருக்கும் கோயில்!

106

திங்கள், வெள்ளி மட்டுமே திறந்திருக்கும் கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்ற ஊரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே அதுவும் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மட்டுமே கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் பூட்டப்பட்டிருக்கும். மேலும், பண்டிகை நாட்கள், திருவிழாக்கள் என்றால் மற்ற நாட்களிலும் கோயில் திறக்கப்பட்டிருக்கும். இப்படியொரு வித்தியாசமான கோயில் குறித்து தான் இன்றைய பதிவில் நாம் காண்போம்…

பொதுவான தகவல்:

குலோத்துங்க சோழ மன்னனால் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டது. மலைகள், ஏரிகள், குளங்கள், தோப்புகள், வயல்கள் சூழந்துள்ள ஊரின் எல்லைப் பகுதியில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அன்னைக்கு காவல் தெய்வமாக அய்யனார் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை:

கல்யாண வரம், குழந்தை பாக்கியம் கிடைக்க சிறுவாச்சூர் வந்து மதுரகாளியம்மனை வழிபடுகின்றனர். வம்பு வழக்குகள், நோய், உடல் உபாதைகள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் ஆகியவற்றிற்கு அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால், அனைவரது வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைக்கிறாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தல பெருமை:

பொதுவாக மாவிளக்கு நேர்த்திக்கடன் என்றால், வீட்டிலேயே மாவு, கருப்பட்டி வைத்து மாவிளக்கு தயார் செய்து கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வார்கள். ஆனால், இந்தக் கோயிலில், கோயிலுக்குள்ளேயே அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு தயார் செய்கிறார்கள். மாவிளக்கு இடிக்கவே உரல்களும், உலக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. அப்படி மாவிளக்கு இடிக்க முடியாத பக்தர்களுக்கு இடித்து தர பணியாளர்கள் சம்பளத்திற்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

முதலில் மதுரை காளியம்மன் என்ற திருப்பெயர் நாளடைவில் மதுரகாளியம்மன் என்று ஆனது. வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி 4 அடி உயரத்தில் உடுக்கை, சூலம், அட்சயபாத்திரம், பாசம் ஆகியவற்றை 4 திருக்கரங்களில் ஏந்தியவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இடது காலை மடித்தும், வலது காலை சிம்மத்தின் மீது ஊன்றியும் அமர்ந்த நிலையில் காட்சி தரும் காளியம்மன், அரக்கல் இல்லாத்தால் அழிக்கும் தொழிலை செய்வதில்லை. அருளும் நிலையிலேயே பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். ஆதலால், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை அம்மனிடம் கூறி, பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், நேர்த்திக்கடனை செலுத்துக் கொள்கின்றனர்.

தல வரலாறு:

சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி மன அமைதிக்காக இந்த ஊருக்கு வந்து அமைதி கொண்டாள் என்று செவி வழியாக ஒரு செய்தி கூறப்படுகிறது. சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வமே செல்லியம்மன். ஒரு மந்திரவாதி, தனது மந்திர வலிமையால், செல்லியம்மன்னை கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளான். அப்போது, ஒரு வெள்ளியக்கிழமை அன்று, மதுரை காளியம்மன், சிறுவாச்சூருக்கு வந்து செல்லியம்மன்னிடம் இன்று இரவு மட்டும் தங்குவதற்கு இடம் கேட்கிறாள். செல்லியம்மன்னோ தன்னை மந்திர வலிமையால் கட்டுப்படுத்திய மந்திரவாதி குறித்து முழு கதையையும் கூறுகிறாள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சக்தி வாய்ந்த மதுரை காளியம்மன் அதற்கு தான் ஒரு வழி செய்வதாக கூறி வெள்ளிக்கிழமை இன்று அங்கேயே தங்குகிறாள். அப்போது வந்த மந்திரவாதியை அழிக்கிறாள். இதனால், ஆனந்தமடைந்த செல்லியம்மன், இனி சிறுவாச்சூர் கோயிலிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வர வேண்டும் என்று வேண்டுகிறாள். தான் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்று விடுவதாகவும், ஆனால், கோயிலில் எப்போதும் தனக்கு தான் முதல் மரியாதை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறாள். இதற்கு மதுரை காளியம்மன் ஒப்புக் கொண்டு வெள்ளிக்கிழமை கோயிலில் அமர்கிறாள்.

இந்த கோயிலில் பூஜை செய்யப்படும் போது முதலில் செல்லியம்மனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. அதாவது, செல்லியம்மன் அமர்ந்திருக்கும் பெரியசாமி மலையை நோக்கி தீபாராதனை காட்டப்படுகிறது. அதன் பிறகு தான் மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சிறுவாச்சூருக்கு வந்த மதுர காளியம்மன் திங்கள் கிழமை அன்று தான் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். மற்ற நாட்களில் செல்லியம்மன் இருக்கும் பெரியசாமி மலையில் செல்லியம்மனுடன் தங்குவதாக கூறப்படுகிறது.

ஆதலால், தான் வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்கள் மட்டும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பூஜை செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. திருவிழா, குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பிற நாட்களிலும் கோயில் திறக்கப்பட்டு பூஜை புனஷ்காரங்கள் செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

மாவிளக்கு ஏற்றுதல் இந்த கோயிலின் முக்கியமான நேர்த்திக்கடன். உடல் உறுப்புகளான வயிறு, நெற்றி, மார்பு, கை, கால், தலை ஆகிய பாகங்களில் மாவிளக்கு வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். மாவிளக்கு தவிர அங்கப்பிரதட்சணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திக்கடன். மேலும், பாலாபிஷேகம், அன்னதானம், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்கிறார்கள்.