திருநீரணி விழா: பெருமாள் விபூதி பூசிக் கொள்ளும் விழா!

112

திருநீரணி விழா: பெருமாள் விபூதி பூசிக் கொள்ளும் விழா!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி என்ற ஊரில் உள்ள கோயில் லோகநாதப் பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் லோகநாதப்பெருமாள் (சியாமளமேனி பெருமாள்) மூலவராக காட்சி தருகிறார். தாமோதர நாராயணன், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் கையை இடுப்பில் கொண்டு கண்ணன் நிற்பதைப் போன்று உற்சவர் அருள் பாலிக்கிறார்.

லோகநாயகி (அரவிந்த்நாயகி) அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். மகிழ மரம் கோயிலில் தல விருட்சமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் திருநீரணி விழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே விபூதி பூசிக் கொண்டு தான் வருவார்களாம். இத்தல இறைவன் பிரம்மா, கவுதமர், உபரிசரவசு, வசிட்டர், பிருகு, மாடரர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் இத்தலத்தில் இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18ஆவது தலம். பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகியவை பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள்.  இந்த கோயிலில் உள்ள தீர்த்தத்தின் பெயரைக் கேட்டாலே சகல பாவங்கள் அனைத்தும் விலகும். இந்தக் கோயிலில் உள்ள பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம்.

தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா கோயிலிலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பதைப் போன்று அருள் பாலிக்கிறார். ஊராக் கிணறு, உறங்காபுளி, தேராவழக்கு திருக்கண்ணங்குடி என்று இந்தக் கோயிலுக்கு திவ்ய தேச சிறப்பு பழமொழியும் உண்டு.

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து அதனை தனது பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்தார். இதனைக் கண்ட கண்ணன் குழந்தை வடிவம் எடுத்து கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டார். இதைக் கண்ட வசிஷ்டர் அவரை விரட்டினார்.

வசிஷ்டரால் விரட்டியடிக்கப்பட்ட கண்ணன் ஓடி வருவதை மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் தங்களது ஞான திருஷ்டியால் அறிந்து கிருஷ்ணனை பாசக்கயிறு கொண்டு கட்டிப்போட்டனர். ரிஷிகளின் பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன், வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை வேண்டிக் கேட்டுப் பெறுங்கள் என்றார். அதற்கு ரிஷிகள், கண்ணா நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போன்று இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தருள வேண்டும் என்று வேண்டினர்.

ரிஷிகளின் வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக்கொள்ளவே, கோபுரங்களும், விமானங்களும் உண்டாகிவிட்டன. இதையறிந்த பிரம்மனும், தேவர்களும் உடனே வந்து பிரம்மோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்றதால் கண்ணங்குடி என்றாது.