திருப்பங்கள் உண்டாக திருவோண விரதம் வழிபாடு!

240

திருப்பங்கள் உண்டாக திருவோண விரதம் வழிபாடு!

ஒவ்வொரு மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரத முறைக்கு திருவோண விரதம் என்று பெயர். இந்த விரதம் மேற்கொண்டால், வாழ்க்கையில் ஏராளமான திருப்பங்கள் உண்டாகும்.

மாதந்தோறும் வரும் திருவோண விரதத்தை தீவிர வைணவர்கள் கடைபிடித்து வருகின்றார்கள். சரி, திருவோண விரதம் என்றால் என்ன என்பது குறித்தும், எப்படி வந்தது என்பது குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.

திருமால் 10 அதராங்கள் மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்திர நாளில் தான். அதனால், தான் ஆண்டுதோறும் வரும் ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் கேரளா நாட்டில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பங்குனி மாத திருவோண நட்சத்திர நாளில் மார்க்கண்டேய மகரிஷியின் மகளான பூமி தேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு சென்றார். ஆனால், ஐப்பதி மாத திருவோண நட்சத்திர நாளில் பூமி தேவியை மணமுடித்தார். இதன் காரணமாக ஒவ்வொரு திருவோண நட்சத்திர நாளில் ஒப்பிலியப்பன் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். அன்று இரவே பெருமாளின் மந்திரங்களை சொல்லி வர வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து புதிய ஆடையை உடுத்திக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜையறையில் பெருமாள் படத்திற்கு அல்லது பெருமாள் சிலைக்கு துளசி மாளை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பிற்பகலில் சமையல் செய்யும் போது உணவில் உப்பு சேர்த்து கொள்ளக் கூடாது. பூமாதேவிக்கு சமையலில் உப்பு போட்டு சமையல் செய்யத் தெரியாது. இதை ஒரு காரணமாக வைத்து மார்க்கண்டேயர் திருமாலுக்கு உப்பிலியப்பனுக்கு பூமாதேவியை மணமுடித்து தர மறுப்பு தெரிவித்தார். இன்றும் ஒப்பிலியப்பன் கோயில்களில் உப்பு இல்லாத நைவேத்தியம் படைக்கப்படுகிறது. ஆகையால் திருவோண விரதம் கடைபிடிக்கும் போது உப்பில்லா சமையல் செய்து அதனை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்வதன் மூலமாக பெருமாளின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரவில் பால் மற்றும் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். காலையில் திருவோண விரதம் மேற்கொள்ளும் போது நோய்கள் அனைத்தும் குணமாகும். பிற்பகலில் வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அனைத்தும் பெருகும். மாலையில் பெருமாள் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

அதோடு, 4ஆவது ஜாம பூஜை வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி ஒவ்வொரு மாதமும் அல்லது ஏதாவது ஒரு மாதம் திருவோணம் விரதம் மேற்கொண்டால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் கிடைக்கும். அதோடு வாழ்க்கையில் ஏராளமான திருப்பங்கள் உண்டாகும் என்பது ஐதீகம்.