திருமணத்தடை நீங்க அம்பாளுக்கு தேன் அபிஷேக வழிபாடு!

160

திருமணத்தடை நீங்க அம்பாளுக்கு தேன் அபிஷேக வழிபாடு!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி என்ற ஊரில் உள்ள கோயில் ஊன்றீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஊன்றீஸ்வரர் (ஆதாரதண்டேஸ்வரர்) மூலவராக காட்சி தருகிறார். கோயிலில் உற்சவராக சோமஸ்கந்தர் திகழ்கிறார். மின்னொளி அம்பாள் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இலந்தை மரம் தல விருட்சமாக திகழ்கிறது. மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் கோயிலில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் சிவன் கிழக்கு பார்த்தவாறு சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாற்றி வழிபாடு செய்கின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்து காணப்படுகிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண் பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இந்தக் கோயில் முதலில் பூண்டிக்கு அருகேயுள்ள திருவளம்புதூர் ஏரியின் அருகே இருந்தது. பிற்காலத்தில் இந்தக் கோயில் பூண்டி பகுதியின் மத்தியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதான வாசலுக்கு நேரே மின்னொளி அம்பாள் சன்னதி இருக்கிறது. ஒரே இடத்தில் நின்று சுவாமியையும், அம்பாளையும் வழிபடும்படி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சண்முகம் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். பைரவர் 8 கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

கால பைரவருக்கு அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்கின்றனர். சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது.

பின் அம்பாள் சுந்தரரிடம் மனிதர்கள் தவறு செய்வது இயற்கை ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கு ஏற்ப நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.

தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும் என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும், சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால், அம்பாள் மின்னொளி அம்பாள் என்றும் கனிவாய் மொழிநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்று கூறுகிறார்கள்.

வாழ்க்கையே இருண்டுவிட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு அம்பாள் ஒளி கொடுத்து வாழ வைக்கிறாள் எ என்பது நம்பிக்கை. பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழ வைக்கும் தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. எனவே இந்தக் கோயிலை, நம்பிக்கை கோயில், என்றும் சொல்கின்றனர்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர் திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவன சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால், அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாவூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறிய போது சிவன் அவரது 2 கண்களையும் பறித்துக் கொண்டார்.

சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒன்று ஊன்றுகோலை மட்டும் கொடுத்து நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்றார்.

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர் சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டுவிட்டது. இதனால், நந்தியின் ஒரு கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தனது யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.