திருமணத்தடை நீங்க ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் வழிபாடு!

157

திருமணத்தடை நீங்க ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் வழிபாடு!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் சுவாமி மலையிலிருந்து 5 கிமீ தொலைவில் உமையாள்புரம் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் வசித்து வந்தவர் ஸ்ரீ சீத்தாராம சாஸ்திரிகள். இவர், காவிரிக்கரையில் அமைந்துள்ள உமையாள்புரம் பகுதியிலுள்ள வாய்க்காலில் நீராடும் போது, நீரோட்டத்தில் விநாயகர் சிலை ஒன்றை கண்டுள்ளார்.

அதையெடுத்து வந்து சிறியதாக கோயில் கட்டி விநாயகருக்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளார். மேலும், கும்பாபிஷேகம், பூஜை, புனஷ்காரங்கள் செய்து வழிபட்டு வந்துள்ளார். அப்படி அவர் வழிபட்டு வந்த விநாயகர் தான் சிந்தாமணி விநாயகர் (சிந்தாமணி பிள்ளையார்).

கணபதி:

க என்றால் அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும்

ண என்றால் மோட்சத்தைக் குறிக்கும்.

பதி – அந்த பரம் பொருளைக் (சிவபெருமான்) குறிக்கும்.

ஈசன்:

பரம் பொருளான ஈசனை படைத்தவனே கணபதி என்று கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் சொல்லுகின்றன. ஈசனே கணபதி என்று பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். பிள்ளையாருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அவரது மனைவி சித்தி, புத்தி என்றும் சொல்லப்படுவதுண்டு. நல்ல சிந்தனையும், தெளிவான அறிவும் தான் நமக்கு தேவை. ஆகவே இந்த இரண்டையும் கொண்ட பிள்ளையாரை வணங்கினால் நமக்கு கிடைக்கும்.

சித்தி, புத்திக்கு சுபன், லாபன் என்று பெயரில் இரு மகன்கள், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்பதற்கு சுபத்தை அளிக்கக் கூடியவன் என்று பொருள். லாபன் என்றாலே லாபத்தை தரக்கூடியவன். சந்தோஷி – சந்தோஷத்தைக் கொடுக்க கூடியவர். பிள்ளையாரை வணங்கினால் மட்டுமே நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால், விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவற்றையும் பெற முடியும்.

ஆனந்தபுவனம்:

கைலாச மலையான கைலையின் ஒரு பகுதி ஆனந்தபுவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளது. இது கணேசனின் உறைவிடம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சிந்தாமணி த்வீபம் என்றும் அழைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் எனப்படுகிறார்.

பிள்ளையாரின் 8 அவதாரங்கள்:

பிள்ளையார் 8 விதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்று முத்கல புராணத்தில் ஆங்கிரஸ் முனிவர் கூறியிருக்கிறார்.

  1. வக்ர துண்டர்
  2. ஏகதந்தர்
  3. மகோதரர்
  4. கஜானனர்
  5. லம்போதரர்
  6. விகடர்
  7. விக்னராஜர்
  8. தூம்ரவர்ணர்

ஸ்ரீ சிந்தாமணி பிள்ளையார்:

சிந்தாமணி பிள்ளையாரை வழிபடுவதன் மூலமாக திருமணத்தடை நீங்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.